Main Menu

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் பேரணி நடத்திட தி.மு.க.தீர்மானம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புப் பேரணி நடத்திட தி.மு.க.வின் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பேரணி எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில்நடைபெற்ற குறித்த  கூட்டத்தில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட 11 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குறித்த கூட்டத்தில் பேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்துவரும் தொப்புள் கொடி உறவுகளான ஒரு லட்சம் ஈழத்தமிழர்களின் உரிமை செறிந்த எதிர்காலத்தையும், நாடு முழுவதும் இருக்கும் முஸ்லிம் மக்களின் அமைதியான வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கியிருக்கிற குடியுரிமை திருத்தச்சட்டம், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது எனவும், பாகிஸ்தான்- வங்கதேசம்- ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளிலிருந்து வரும் முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தினருக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் இந்த திருத்தச் சட்டம், இலங்கையிலிருந்து குடியேறியுள்ள ஈழத்தமிழர்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதென்பது, பா.ஜ.க.அரசின் மதவாதம் மட்டுமல்ல, அப்பட்டமான தமிழின விரோதப் போக்கையும் வெளிப்படுத்தும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், மதவாத மற்றும் இனவாதக் கண்ணோட்டத்துடனும், ஈழத்தமிழர்களைப் புறக்கணித்திடும் வகையிலும் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடுமையாகக் கண்டிப்பதுடன், நாட்டில் முதலில் அமைதி நிலவ வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன், அதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் எனவும் குறித்த விடயம் தொடர்பில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிர்ப்பினைத் தெரிவிக்கும் வகையில், 23.12.2019 திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில், சென்னையில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி நடத்திடுவது எனவும் அனைத்து கட்சிககளாலும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...