Main Menu

சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகல்!

வல்லரசு நாடுகள் இணைந்து ஏற்படுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா வெளியேறிய இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு, ஈரான் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் அன்டனியோ குட்டரெசுக்கு, ஈரான் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஷாரீப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், ‘அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது, ஐ.நா.வின் விதிமுறைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மீறும் செயல் ஆகும். அதன் விளைவுகளுக்கு ஐ.நா. சபை அமெரிக்காவை உடனடியாக பொறுப்பேற்க வைக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, சீனா, உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும், ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்பு மிக்க அணுசக்தி ஒப்பந்தம் கடந்த 2015ஆம் ஆண்டில் கையெழுத்தானது.

‘அணுசக்தி ஒப்பந்தம்’ என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும். அதற்கு பிரதி பலனாக, அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதார தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப்பெற வேண்டும்.

அத்துடன், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கானவை அல்ல என்பதை ஈரான் உறுதி செய்யவும், அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் இரு தரப்பிலும் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக கூறி அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அத்தோடு, எண்ணெய் வளம் மிக்க நாடான ஈரான் மீது, அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது.

உலக நாடுகளுடன் 2015ஆம் ஆண்டு ஈரான் கைச்சாத்திட்ட சவுத் பார்ஸ் கள ஒப்பந்தத்திலிருந்து, அமெரிக்கா விலகியதையடுத்து பொருளாதார விபத்து எனக் கூறப்படும் வணிக இறுக்கம் ஏற்பட்டது.

இதற்கிடையில், அண்மையில் ஈரான் இராணுவ தளபதியை அமெரிக்கா கொன்றதையடுத்து, இந்த மோதல் போக்கு அதிகரித்தது. அத்துடன் ஈரான், ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்கா, ஈரான் மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதித்தது.

அமெரிக்கா நடவடிக்கையில் கடும் அதிருப்தி அடைந்த ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிக்கும் பணியை விரைவு படுத்தியது. சமீபத்தில், அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும் முக்கிய மூலப்பொருளான யுரேனியம் உற்பத்தியை ஈரான் 10 மடங்காக அதிகரித்தது.

தற்போது பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ள ஈரான், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு மருந்து உள்ளிட்ட பொருட்களை வாங்குவதில் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

இந்நிலையில், தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை நீக்க வேண்டுமென அண்மையில், அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி கோரிக்கை விடுத்துள்ளார்.

பகிரவும்...