Main Menu

பயிற்சிகளை தொடங்கவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள்!

சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, மிகுந்த அவதானத்துடன் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவுள்ளதாக, அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன்படி வீரர்களுக்கான பயிற்சி முகாம் எதிர்வரும் 15ஆம் திகதி தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறுகையில், ‘முடக்கநிலை தளர்த்தப்பட்டவுடன் நாங்கள், எமது வேகப் பந்துவீச்சாளர்களிற்கு பயிற்சிகளை வழங்க எதிர்பார்க்கின்றோம். அவர்களுக்கே அதிக பயிற்சிகள் தேவையாக இருக்கின்றது.

எங்களுக்கு சிறிய எண்ணிக்கையிலான வீரர்களுக்கே பயிற்சிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, நாம் வேகப் பந்துவீச்சாளர்களை முதலில் மைதானத்திற்குள் உள்வாங்க இருக்கின்றோம். நாங்கள் கிரிக்கெட் போட்டிகளுக்காக முழுமையாக தயாராகும் போது, வேகப் பந்துவீச்சாளர்களும் போதிய அளவு தயாராகி இருப்பார்கள்’ என கூறினார்.

இந்த பயிற்சி முகாமில் முதலில் பங்கெடுக்கும் வீரர்களாக லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து, சுரங்க லக்மால், கசுன் ராஜித, நுவான் பிரதீப், இசுரு உதான, தசுன் ஷானக்க மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

பகிரவும்...