Main Menu

சிங்கப்பூரில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்வு – செலவு செய்த தொகை குறைந்தது!

சிங்கப்பூருக்கு 2019 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் பயணித்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதும், அவர்கள் அங்கு சென்று செலவு செய்த தொகை குறைந்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலாப் பயணத்துறைக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் பாதியில் 9.3 மில்லியன் பயணிகள் சிங்கப்பூருக்கு பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியை ஒப்புநோக்குமிடத்து இந்த எண்ணிக்கை 1.3 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பயணிகள் செலவு செய்த தொகை 3 சதவீதம் குறைவடைந்து 13.1 பில்லியன் வெள்ளி வருமானமாக ஈட்டப்பட்டுள்ளது.

முதல் அரையாண்டில் பயணிகள் தங்குமிடம், உணவு-பானம், பொழுதுபோக்கு-விளையாட்டு ஆகியவற்றுக்காகக் குறைவான தொகையையே செலவிட்டனர். இருப்பினும் அவர்கள் பொருள் கொள்வனவிற்காக செலவிட்ட தொகை அதிகரித்தது.

விடுதிகளில் தங்குவதற்காகப் பயணிகள் செலவு செய்த தொகை 1.7 சதவீதம் அதிகரித்து 1.9 பில்லியன் வெள்ளியை எட்டியுள்ளது.

சிங்கப்பூருக்கு சென்ற பயணிகளில் இந்தியா, சீனா, இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே மிக அதிகமாகச் செலவு செய்துள்ளனர்.

மொத்த வருமானத்தில் அந்த மூன்று நாடுகளைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு 42 சதவீதமாகும். அதில், சுற்றுலாப் பயணம், பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டுகள் ஆகியவற்றுக்காகச் செலவிட்ட தொகை அடங்காது என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...