Main Menu

சவுதிக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது வான்வழித் தாக்குதல்!

சவுதி அரேபியாவிற்கு சொந்தமான அரம்கோ மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது இன்று(சனிக்கிழமை) ட்ரோன் மூலம் வான்வழித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரியாத்தின் வடகிழக்கில் சுமார் 330 கிலோமீட்டர் தொலைவில் புக்கியாக் என்ற இடத்தில் பிரமாண்ட மசகு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது.

இந்த ஆலையில் நாளொன்றுக்கு 70 லட்சம் பீப்பாய்கள் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகிறது.

குறித்த ஆலையில் தாக்குதல் நடத்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஏமனில் செயல்படும் ஹவுதி தீவிரவாதிகள் உள்ளிட்ட அமைப்புகள் திட்டமிட்டன. இதனால் ஆலையை சுற்றி கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் ஆலை மீது ட்ரோன் எனப்படும் வான்வழித் தாக்குதல் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் சுத்திகரிப்பு ஆலையும், எண்ணெய் வயலும் தீ பற்றி எரிந்தன. எனினும் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இந்தநிலையில் இது தீவிரவாத தாக்குதலா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சவுதி அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பகிரவும்...