Main Menu

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி!

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “ நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டு காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது.

முற்போக்கு அரசியலால் தமிழக அரசியலின் போக்கையே மொத்தமாய் மாற்றி  அரசியல் திசையைத் தீர்மானிக்கிற பெரும் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்திருக்கிறது.  வாக்கு அரசியலுக்காக வேலை செய்திடாது, நாளைய தலைமுறையினருக்கான மாற்று அரசியலை முன்வைத்து சமூகக்கடமை ஆற்றியது.

தற்போது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இரு பெரும் திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன.

இவற்றிற்கு முற்றிலும் நேர்மாறாக நற்கருத்துகளை மக்களிடையே விதைத்து அதன்மூலம் மக்களை அரசியல்படுத்தி அதனூடே வாக்குகளைப் பெற்று ஜனநாயகத்தை நிலைநிறுத்த போராடிக் கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி.

வருகிற 7-ந் திகதி  மதியம் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிட இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...