தமிழ்த் தேசியப் பேரவை பிரதிநிதிகளை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவையின் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று (03 July) இடம்பெற்றுள்ளது.
தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியப் பேரவையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சந்திப்பில், தமிழ் மக்கள் தற்போது எதிர்நோக்கும் அரசியல், மனித உரிமைகள் பிரச்சினைகள், ஒற்றையாட்சி அரசியலமைப்பு முறை ஒழிக்கப்படுதல், சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம், இனவழிப்புக்கு சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம், இந்திய–இலங்கைத் தமிழ்க் கடற்தொழிலாளர்களின் பிரச்சினைக்கு நிலையான தீர்வு காணும் நடவடிக்கைகள், இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் உள்ளிட்ட பல முக்கிய விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், தமிழ்த் தேசியப் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஏழு பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்
