தவெக தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் முதல்வருடன் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்திப்பு
தவெக நடத்தும் தோழமை கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைவர்கள் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசினர். தவெக தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு தோழமை கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் அதில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் தலைமைச் செயலகத்தில், முதல்வர் விஜய்யை நேற்று காலை சந்தித்து பேசினர்.
மு.வீரபாண்டியன்: தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பிற மாநில தொழிலாளர்களின் பணி பாதுகாப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை முதல்வர் விஜய்யிடம் முன்வைத்தோம்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவின் தோழமை கட்சிகளுக்கான கூட்டத்தில் பங்கேற்கவில்லை. நாங்கள் ஆட்சியில் அங்கம் வகிக்கவில்லை.
பெ.சண்முகம்: நாங்கள் ஏற்கெனவே இந்த அரசு அமைவதற்கு வெளியிலிருந்து ஆதரவு என்பதை வெளிப்படையாக அறிவித்து, அந்த ஆதரவு தொடரும் என்பதையும் தெரிவித்திருக்கிறோம்.
தவெக தலைமையில் ஒரு புதிய கூட்டணி அமைக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதுகுறித்து முதல்வரோ, அமைச்சர்களோ எங்களுடன் எதுவும் பேசவில்லை.
இந்நிகழ்வில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் நா.பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
