திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்? – இன்று அதிகார பூர்வமாக அறிவிக்கிறார் வைகோ
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுகிறதா? என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இன்று அறிவிக்கவுள்ளார்.
கடந்த 2017 முதல் திமுக கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடித்து வருகிறது. நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, கடையநல்லூர் மற்றும் சீர்காழி ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மேலும், தவெக அமைச்சரவையில் கம்யூனிஸ்ட்கள் தவிர மற்ற கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இத்தகைய சூழலில், திமுக மற்றும் மதிமுக இடையே கடந்த சில மாதங்களாகவே ஒருவித மோதல் போக்கு நிலவி வருகிறது.
மேலும், வைகோவும், அவரது மகனும் கட்சியின் முதன்மை செயலாளருமான துரை வைகோவும், தவெக அரசை தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.
இந்த பரபரப்பான நிலையில், கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து ஆலோசிப்பதற்காக மதிமுகவின் உயர் நிலைக்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி அமைப்பது என்றும், அதற்கு வசதியாக மதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வது என்றும் விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தும் அவர் கூட்டத்தைப் புறக்கணித்ததால், அவரிடம் விளக்கம் கேட்க கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது. அதேநேரம், தவெகவுடன் கூட்டணி வைப்பதில் செந்தில்செல் வனுக்கு விருப்பம் இல்லாததால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
