Main Menu

கொரோனா வைரஸ்: தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க நீதிமன்றம் மறுப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாததால் தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட முடியாதென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜவேலு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுநிகழ்ச்சிகள் பல இரத்து செய்யப்படுகின்றன. இந்த வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல அறிவுரைகளை வழங்கி வருகின்றன. பொதுமக்கள் ஒரு இடத்தில் அதிக எண்ணிக்கையில் கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

ஆனால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தெரியாது. இதனால், கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன. தற்போது நடப்பு கல்வியாண்டு முடிவடையும் நிலை வந்துள்ளதால், பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிப்பதால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

எனவே, தமிழக பள்ளிகளுக்கு விடுமுறை விடவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் முன்பு நேற்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  இதன்போது அரசு தரப்பில் முன்னிலையான  சட்டத்தரணி, “கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கடுமையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது.  அனைத்து பள்ளிகளுக்கும் விழிப்புணர்வு குறித்த சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரையில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏதும் இல்லை” என்று கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், “பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. இதுகுறித்து தமிழக அரசுக்கு உத்தரவிடவும் முடியாது”என்று உத்தரவிட் டனர்.

மேலும், பொதுமக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை தீவிரமாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...