Main Menu

குழந்தை சுர்ஜித்தின் உடலை வெளியில் காட்டாதது ஏன்? : விளக்கமளித்தார் ராதாகிருஷ்ணன்!

ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்த குழந்தை சுர்ஜித்தின் உடலை ஏன் வெளியில் காட்டவில்லை என்பதற்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “குழந்தை இறந்து துர்நாற்றம் வீச ஆரம்பித்த பிறகே உடலை அவ்வாறு எடுத்தோம். களப்பணியாளர்கள் அவ்வளவு உழைத்தும் அவர்கள் மீது விமர்சனம் வருகிறது. கும்பகோணம் தீ விபத்தில் குழந்தைகளின் சடலங்களை நேரடியாகக் காட்டியதற்கான விமர்சனங்களை அனைவரும் எதிர்கொண்டோம்.

அதன்பிறகு சடலங்களை வெளியே காட்டுவது குறித்த உரிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்துள்ளது. அதைப் பின்பற்றினோம். அதைவிடுத்து, என்னென்ன பாகங்கள் இருந்தன, இல்லை என நாங்கள் சொன்னால், இந்த விதிமுறைகளின் அடிப்படையில் எங்கள் மீது வழக்குத் தொடுக்க வாய்ப்புண்டு.

சடலம் என்ன மாதிரியான நிலையில் இருந்தது என்பதை பெற்றோரிடம் தெளிவாகச் சொல்லியிருக்கிறோம். இதற்கு மேல் இந்த விடயத்தில் விளக்கமளிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது. இந்தச் சம்பவம் பேரிடர் இல்லை. விபத்து. அதற்கேற்ற வழிமுறைகளைப் பின்பற்றினோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 80 மணித்தியாலங்களை தாண்டி முன்னெடுக்கப்பட்டபோதும் குறித்த முயற்சி பயனற்றுபோனது.

குழந்தை சுர்ஜித் உயிரிழந்துள்ளதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் மீட்பு பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இறுதி நேரத்தில் குழந்தை மீட்கப்பட்டமை குறித்த காட்சிகள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...