Main Menu

தபால் மூல வாக்களிப்பில் விரும்பியவருக்கு வாக்களிக்கலாம் ; ஐந்து கட்சிகள் கூட்டாகக் முடிவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் வெளிவராத நிலையில் நாளை இடம்பெறவுள்ள தபால் மூல வாக்களிப்பில் எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்குமாறு தமிழ்மக்களைக் கோர முடியாதுள்ளது. 

எனினும், தமிழ் மக்கள் தமது வாக்குரிமையைத் தவறாது பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பாதையில் பயணிக்கும் ஐந்து கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது நிலைப்பாடொன்றினைத் தோற்றுவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, புளொட், ரெலோ மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃவ் ஆகிய கட்சிகள் இணைந்து இம்மாத நடுப்பகுதியில் பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்து 13 அம்சக் கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தன.

அதன் தொடர்ச்சியாக – நாளை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அண்மையிலுள்ள ப்ரைட் இன் விடுதியில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் கூடிய ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகளுமே கூட்டாக இந்த முடிவை எடுத்துள்ளனர்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களதும் தேர்தல் விஞ்ஞாபனங்கள் கிடைக்கப்பெற்றதும், விரைவில் மீண்டும் கூடி யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பில் முடிவெடுக்கப்படும் என இன்றைய சந்திப்பில் கட்சிகளின் பிரதிநிதிகள் இணக்கங்கண்டிருப்பதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...