Main Menu

வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி: குற்றப் புலனாய்வு திணைக்களம்

சிஐடியினருக்கு வாக்குமூலம் வழங்கியவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு முக்கியமான விடயங்களை தெரிவித்தவர் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் யார் என்பது தனக்கு தெரியும் என கண்டியில் வெளியிட்டகருத்துக்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி நேற்று சிஐடியினரிடம் ஐந்து மணிநேரத்திற்கு மேல்  வாக்குமூலம் வழங்கினார்.

காலை பத்தரைமணிக்கு  இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்ற அவர் 3.50 அளவில் அங்கிருந்து வெளியேறினார்.

முன்வாசல் வழியாக வந்த சிறிசேன வழமையான கேள்விகளை எதிர்கொண்டார் என சிஐடி வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.குறுக்கு விசாரணைகளும் இடம்பெற்றுள்ளன.

உயிர்த்த ஞாயிறுதாக்குதல்களின் முக்கிய சூத்திரதாரிகள் யார் என்பது மூன்று வாரத்திற்கு முன்பே தனக்கு தெரியவந்ததாக விசாரணையின் போது தெரிவித்துள்ள மைத்திரிபாலசிறிசேன தனக்கு யார் அந்த விடயத்தினை தெரிவித்தது என்பதை தெரிவிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை மீளாய்வு செய்வோம் என தெரிவித்துள்ள பொலிஸ்அதிகாரியொருவர் சட்டமா அதிபரின் உத்தரவின் படி அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தெரிவித்த விடயங்களை  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சிஐடியினர் திட்டமிட்டுள்ளனர்  எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பகிரவும்...