Main Menu

இலங்கையின் வருமானத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு

இலங்கையின் வருமானத்தில் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பன பாரிய பங்களிப்பை வழங்கி வருகின்றது. 2018 ஆம் ஆண்டு இலங்கையின் முக்கிய ஏற்றுமதி மூலங்களாகவிருந்த ஆடை, தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திகள் ஆகியவற்றுக்கு அதிகமாக சுற்றுலாத்துறையின் மூலம் அதிக வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட கொவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டமை, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றினால் இலங்கையின் வருமானம் குறைந்து கடன் தொகை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இலங்கைக்கு வருமானத்தை அதிகரிக்கும் வகையில் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையில், 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சுற்றுலாத்துறை வளர்ச்சியடைந்தமையை அவதானிக்க முடிகின்றது. 2009 ஆம் ஆண்டு சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 349.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுக்கொண்டிருந்த நிலையில் அடுத்த ஐந்து ஆண்டுகளை கடந்து 2014 ஆம் ஆண்டு 2431.1 மில்லியன் அ.டொலர்களை பதிவு செய்திருந்தது. இது 5.95 சதவீத அதிகரிப்பாகும்.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தொடர்ச்சியாக இலங்கை சுற்றுலாத்துறையின் மூலம் பெற்றுக்கொண்ட வருமானம் அதிகரித்துச் சென்றிருந்தது. அதிகபட்சமாக 2018 ஆம் ஆண்டு 4380.6 மில்லியன் அ.டொலர்கள் வருமானத்தை இலங்கை பெற்றுக் கொண்டிருந்தது.

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் நிலைமைகள், கொவிட் தொற்று நெருக்கடியின் காரணமாக நாடு முடக்கப்பட்டமை மற்றும் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலைமைகள் என்பன சுற்றுலாத்துறை வீழ்ச்சியில் பாரிய தாக்கத்தை செலுத்தியிருந்தன.

2019 ஆம் ஆண்டுக்கு முன்னரான ஆறு வருட காலப்பகுதியில் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 20,842 மில்லியன் அ.டொலர்களை வருமானமாக பெற்றிருந்தது. இவை 2019 ஆண்டுக்குப் பின்னர் 5081 மில்லியன் அ.டொலராக வீழ்ச்சியடைந்திருந்தது. 2009 ஆம் ஆண்டு நிலவிய உள்நாட்டு யுத்தத்துக்குப் பின்னர் 2021 ஆம் ஆண்டு மிகக் குறைந்த வருமானத்தை சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை பதிவு செய்துள்ளது.

2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் வெளிநாட்டு நாணய வருவாய்களில் மூன்றாவது மிகப்பெரும் மூலமாக சுற்றுலாத்துறை காணப்பட்டதுடன் இக்காலப்பகுதியில் மொத்தமாக வெளிநாட்டு நாணய வருவாய்களில் சுமார் 14 சதவீதத்துக்கு பங்களித்திருந்ததாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2018 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலாத்துறையின் மூலம் உயரிய வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. இக்காலப்பகுதியில் இலங்கை சுற்றுலாத்துறை வருமானம் 4381 மில்லியன் அ.டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த நிலையில் நாட்டின் ஏனைய ஏற்றுமதி மூலங்களின் மூலம் குறைந்தளவான வருமானமே பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆடைகள் ஏற்றுமதி மூலம் 2459 மில்லியன் அ.டொலர்களும் தேயிலை மற்றும் இறப்பர் உற்பத்திகள் மூலம் 2303 மில்லியன் அ.டொலர்களும் வருமானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை இலங்கைக்கு சுற்றுலாத்துறையின் மூலம் எவ்வித வருமானமும் பெற்றுக்கொள்ளப்படவில்லையென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிக்கின்றது. கொவிட் தொற்று பரவல் மற்றும் நாடு முடக்கப்பட்டமை இவற்றுக்கு பிரதான காரணங்களாக இருந்தன. எனினும் அந்தாண்டில் டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் சுற்றுலாத்துறை வருமானத்தில் சிறிய அதிகரிப்பு ஏற்பட்டிருந்தது.

2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் இலங்கையின் வருமானத்தில் சுற்றுலாத்துறையின் பங்களிப்பு அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது. 2022 ஆம் ஆண்டு 1136 மில்லியன் அ.டொலரிலிருந்து 2023 ஆம் ஆண்டு 2068 மில்லியனாக அதிகரித்திருந்தது.

தற்போது இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகள் மற்றும் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்பவற்றின் காரணமாக சமகாலத்தில் அதன் அபிவிருத்தியில் ஏற்றம் கண்டுள்ளது. எதிர்காலத்தில் இந்நிலைமையில் மேலும் மாற்றங்கள் ஏற்பட்டு இலங்கையின் வெளிநாட்டு நாணய வருமானத்தில் சுற்றுலாத் துறையின் பங்களிப்பு அதிகரிக்குமென எதிர்பார்க்கலாம்.

பகிரவும்...