Main Menu

ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை எட்டும்: தென்னாபிரிக்க மக்களுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் வைரஸ் தொற்று அதிக எண்ணிக்கையை சென்றடையும் நிலைக்கு தள்ளப்படுவோம் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகையால், ஊரடங்கு தளர்த்தப்படுவதால் மக்கள் யாரும் அதிக நம்பிக்கை அடைய வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

தென்னாபிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவிவரும் நிலையில், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளத்த அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. இந்த பின்னணியில் ஜனாதிபதி இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இதனால், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியை பேணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் ஊரடங்கு உத்தரவை படிப்படியாக தளர்த்தும் முதற் கட்டமாக, 1.5 மில்லியன் மக்கள் தங்கள் அலுவலக பணிகளுக்கு திரும்ப தயாராகவுள்ளனர்.

மேலும், சில பாடசாலைகளும் திறக்கப்படும், வீட்டிற்கு சமைத்த உணவுகளை கொண்டு சேர்க்கும் பணிகள் ஆரம்பமாகும். சிகரெட் விற்பனை ஆரம்பமாகும் என பல அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால் மக்கள் கூடுவதற்கும், மது விற்பனைக்கும் தடை நீடிக்கும்.

கொரோனா வைரஸால் ஏற்படவிருக்கும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தென்னாபிரிக்கா 26 பில்லியன் டொலர்கள் தேவை என சர்வதேச அளவில் நிதியுதவி கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுவரை தென்னாபிரிக்காவில் மட்டும் 4,793 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 பேர் உயிரிழந்துள்ளனர். 1473பேர் குணமடைந்துள்ளனர்.

பகிரவும்...