Main Menu

ஏனையோருக்கு அளிக்கின்ற வாக்குகள் கோத்தாவுக்கு அளிக்கும் வாக்குகளாகவே அமையும் – மனோ!

சஜித்தும், கோத்தாபயவும் 50 சதவீத வாக்குகளுக்காகப் போட்டியிடும் போது 5 சதவீதத்திற்காகப் போட்டியிடுகின்ற அநுரகுமாரவிற்கு வாக்களித்து, வாக்குகளை விரயமாக்க முடியாது. அதேபோன்று வடக்கிலிருந்து சிவாஜிலிங்கமும், கிழக்கிலிருந்து ஹிஸ்புல்லாவும் வேட்பாளர்களாகக் களமிறங்கியிருக்கிறார்கள்.

இவர்கள் ஒப்பந்தக்காரர்கள். உண்மையில் இவ்வாறான ஒப்பந்தக்காரர்களுக்கு வாக்களிப்பதும், அநுரகுமார திஸாநாயக்கவிற்கு வாக்களிப்பதும், எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்காமல் பகிஷ்கரிப்பதும் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு அளிக்கின்ற வாக்குகளாகவே அமையும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

சினிவேல்ட் டவரில் நேற்று திங்கட் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஜனாதிபதித் தேர்தல் திகதி நெருங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்கள் முடிவடையவிருக்கின்றன. எனவே இப்போது சில விடயங்கள் குறித்து அவசியம் பேசவேண்டும் என்று கருதுகின்றேன்.

 தற்போது ஜனாதிபதியொருவரை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் பிரசாரக்கூட்டங்களில் கலந்துகொள்கின்றோம். தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கின்றோம்.

ஜனாதிபதியை உருவாக்குவது என்பதை விடவும், வரப்போகின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்துவதற்கான பிரளயம் ஒன்றை செய்கின்றோம் என்பதே பொருத்தமாக இருக்கும்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ மீதான நேசம், பற்று என்பவையெல்லாம் ஒருபுறமிருக்க, எதிர்த்தரப்பின் வேட்பாளர் மீதான வெறுப்பு அதிகமாக இருக்கின்ற காரணத்தினாலேயே அவர் தேர்தலில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக பலரும் சஜித்தை ஆதரிக்கின்றார்கள் எனத் தோன்றுகிறது.

எனவே சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியான பின்னர் எதிரணி வேட்பாளர் மீதான வெறுப்பின் காரணமாக வாக்களித்தவர்களின் மனங்களையும் வெற்றிகொள்ள வேண்டிய கடப்பாடு அவருக்கு இருக்கின்றது. 

அதனைச் செய்வார் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது.

சஜித் பிரேமதாஸ ஒரு கௌதம புத்தர் என்றோ அல்லது மகாத்மா காந்தி என்றோ கூறி நாங்கள் அவருக்காக வாக்கு கேட்கவில்லை. மாறாக வரவிருக்கின்ற ஆபத்தைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்பதே வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட அனைத்து பிரதேசங்களிலும் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் மனநிலையாக இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூட காட்டாறாக வரவிருக்கும் ஆபத்தைத் தடுப்பதற்காக அணை கட்டுவதாகவும், சஜித் பிரேமதாஸவே அந்த அணை என்றும் குறிப்பிட்டார்.

இம்முறை தேர்தல் பிரசாரத்தில் நாம் பாரியதொரு புரட்சியைச் செய்திருக்கிறோம். காலிமுகத்திடலில் இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு அடுத்தபடியாக தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த தலவாக்கலை தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கே பெருமளவான கூட்டம் கூடியது. 

இரத்தினபுரி, கேகாலை, அவிசாவளை, கொழும்பு மற்றும் கண்டி ஆகிய ஐந்து இடங்களில் பிரம்மாண்டமான கூட்டங்களை சஜித் பிரேமதாஸவிற்கு ஆதரவாக நடத்தினோம். 

அந்த 5 கூட்டங்களிலும் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள். எனவே இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அடையப்போகின்ற பாரிய வெற்றியில் ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பங்களிப்பு பெருமளவில் உள்ளது என்பது அவர் நன்கு அறிந்திருப்பார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குச் சம அளவாக தமிழ் முற்போக்குக் கூட்டணி வட, கிழக்கிற்கு வெளியே சுமார் 7 – 8 இலட்சம் வாக்குகளை திரட்டி சஜித் பிரேமதாஸவிற்கு வழங்கியிருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது.

சஜித்திற்கு ஆதரவு வழங்கும் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ் முற்போக்குக் கூட்டணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றில் பெருமளவான வாக்குகளை சஜித்திற்குத் திரட்டிக்கொடுத்தது எமது தமிழ் முற்போக்குக் கூட்டணி என்பதே உண்மையாகும்.

எனவே தேர்தல் முடிவடைந்த பின்னர் இதனை நான் சஜித்திடம் கூறுவேன். ஏனெனில் நாம் கடினமாகப் பாடுபடும் வேளையில், அதற்கான புள்ளிகளை வேறொருவர் பெற்றுக்கொண்டு போவதற்கு அனுமதிக்க முடியாது. அதில் நாம் தெளிவாக இருக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

பகிரவும்...