Main Menu

உலகம் முழுவதும் அடுத்த ஆண்டில் 15கோடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம்!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) நெருக்கடி காரணமாக, அடுத்த ஆண்டில் உலகம் முழுவதும் 15 காடி பேர் அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் உள்ளதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக, உலக வங்கி குழுமத் தலைவர் டேவிட் மால்பாஸ் நேற்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில்,  ‘கொரோனா வைரஸ் தொற்று நோய், இந்த ஆண்டு கூடுதலாக 8.8 கோடி முதல் 11.5 கோடிக்கும் அதிகமான மக்களை வறுமை நிலைக்குத் தள்ளும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதார சுருக்கத்தின் தீவிரத்தைப் பொருத்து, அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 15 கோடியாக உயரும் அபாயம் உள்ளது. உலகம் முழுவதும் 1.4 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தீவிர வறுமையில் விழக்கூடும்.

அந்த வகையில், ஏற்கெனவே அதிக வறுமை வீதங்களைக் கொண்ட நாடுகளில் மேலும் பல இலட்சம் பேர் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள். நடுத்தர வருவாய் கொண்ட பல நாடுகளில் கணிசமான மக்கள் அதிக வறுமைக் கோட்டுக்கு கீழே செல்லும் அபாயம் உள்ளது. அதிக வறுமை நிலைக்குத் தள்ளப்படுவோரில் 82 சதவீதம் பேர், நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

எனவே, வளர்ச்சி, வறுமைக் குறைப்பு ஆகியவற்றுக்கு எதிரான இந்த கடுமையான பின்னடைவை மாற்றியமைக்க வேண்டும். அதற்காக மூலதனம், தொழிலாளர்கள், திறன்கள் மற்றும் புதுமைகளை புதிய தொழில்கள் மற்றும் துறைகளுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றுகுப் பிந்தைய வேறுபட்ட பொருளாதாரத்துக்கு உலக நாடுகள் தயாராக வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...