Main Menu

ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்த மாட்டேன் – ஜோ பிடன்

அமெரிக்க ஜனாதிபதியும் குடியரசுக் கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா இருந்தால் அவருடன் விவாதம் நடத்தமாட்டேன் என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் இடையே கடந்த மாதம் 29ஆம் திகதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.

இதன்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் காரசாரமாக விவாதம் நடத்தினர்.

இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப் 4 நாட்களுக்கு பின்னர் கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.

இதனிடையே ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான 2ஆவது நேரடி விவாதம் எதிர்வரும் 15ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஜோ பிடன், ஜனாதிபதி ட்ரம்பின் தற்போதைய உடல்நலம் குறித்த தகவல் தன்னிடம் இல்லை என்றும் அவருக்கு இன்னும் கொரோனா தொற்று இருந்தால் விவாதம் நடக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தான் தொடர்ந்து மருத்துவரின் வழிகாட்டுதலின்படி நடந்து வருவதாகவும் ட்ரம்புடன் விவாதிக்க தான் ஆவலாக இருக்கிறேன். ஆனால் எல்லா நெறிமுறைகளும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தான் நலமாக இருப்பதாகவும் நேரடி விவாதத்துக்கு தயாராக உள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...