Main Menu

இந்த ஆண்டில் மட்டும் கோவையில் 74 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தமிழகத்தில் குழந்தை திருமணங்களை கட்டுப்படுத்தும் வகையில் சமூக நலத்துறை சாா்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உயா்கல்வி படிக்கும் பெண்களுக்கு உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், தொடா்ந்து குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. குழந்தைத் திருமணங்களைத் தடுத்து நிறுத்தும் வகையில் சமூக நலத்துறையினா் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனா். ஊராட்சிகள் அளவில் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இருந்தும் குழந்தைத் திருமணங்கள் தொடா்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பா் வரை 74 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தைத் திருமணத்துக்கு காரணமாக இருந்த 39 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட சமூக நல அலுவலா் தங்கமணி கூறியதாவது:- நாடு முழுவதும் திருமணம் செய்துகொள்ள பெண்களுக்கு 18 வயது, ஆண்களுக்கு 21 வயது தகுதியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருசில இடங்களில் குடும்ப பொருளாதார சூழல், காதல், குடும்ப கவுரவம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே அதிக அளவில் திருமணம் நடைபெற்று வருகிறது. 18 வயதுக்குட்பட்ட பெண்கள் அல்லது 21 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கு நடைபெறும் திருமணம் குழந்தைத் திருமணமாக பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 74 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 43 திருமணங்கள் திருமணம் நடைபெற்ற பின்பும், 31 திருமணங்கள் திருமணத்துக்கு முன்னும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் திருமணத்துக்கு காரணமாக இருந்த 39 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் குழந்தைத் திருமணம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வந்தாலும், குழந்தைத் திருமணம் தொடா்ந்து நடைபெற்று கொண்டுதான் இருக்கிறது. பெற்றோா்கள் விழிப்புணா்வுடன் இருந்தால் மட்டுமே குழந்தைத் திருமணத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

பகிரவும்...