Main Menu

நைஜர் ஆற்றில் கடும் வெள்ளப் பெருக்கு- படகு கவிழ்ந்து 76 பேர் பலி

நைஜீரியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. இந்நிலையில் அனம்ப்ரா மாநிலத்தில் நைஜர் ஆற்றில் சென்றுகொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்ற அந்த படகு, திடீரென வெள்ளம் அதிகரித்ததால் நிலைகுலைந்து ஆற்றில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 76 பேர் உயிரிழந்தனர். படகில் மொத்தம் 85 பேர் பயணம் செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் முகமது புகாரி இரங்கல் தெரிவித்துள்ளார். நைஜீரியாவில் பருவமழை தொடங்கியதில் இருந்து இதுவரை மழை, வெள்ளம் தொடர்பான விபத்துகளில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சுமார் 20 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1 லட்சம் மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். பெரும்பாலான விளைநிலங்கள் நீரில் மூழ்கி பயிர்கள் அழுகிவிட்டதால் இந்த ஆண்டு உணவு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

பகிரவும்...