Main Menu

லோக் பவனில் புகார் தரலாம்: மக்களுக்கு ஆளுநர் அழைப்பு

 பொதுமக்கள் தங்கள் பிரச்சினைகளை லோக் பவனில் தெரிவிக்கலாம். அதை தமிழக அரசிடம் தெரிவித்து நானும், அரசும் இணைந்து தீர்வு காண்போம் என்று ஆளுநர் அர்லேகர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிகு ராம்ஜி இடாதே வாழ்க்கை வரலாறு குறித்த ‘சமரச யாத்ரீகர்’ எனும் புத்தக வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனில் நேற்று நடைபெற்றது. ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டார். அவர் பேசியதாவது: உங்களிடம் இங்கு ஆங்கிலத்தில் பேசுவதற்கு வெட்கமாக இருக்கிறது. தமிழக ஆளுநராக இருக்கும் நிலையில் தமிழை நான் தெரிந்துகொண்டு பேசவேண்டும். அடுத்த முறை தமிழில் பேச முயற்சிக்கிறேன்.

தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள அரசு, மக்களுக்காக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை லோக்பவனில் தெரிவிக்கலாம். அதை தமிழக அரசிடம் தெரிவித்து, நானும், அரசும் இணைந்து தீர்வு காண்போம். தேவைப்பட்டால் பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு முதல்வரிடமும் கூறுவேன்.

ஆளுநரிடமும், அரசிடமும் ஏதேனும் எதிர்பார்ப்பு இருந்தால் அதையும் தெரிவியுங்கள். நாம் ஒன்றிணைந்து மக்களுக்காக செயல்படுவோம். நமது சமுதாயத்தில் சமூக நல்லிணக்கம் இல்லாமல் போனதுதான் மிகப்பெரிய பிரச்சினை. அதை சரிசெய்ய வேண்டும். இவ்வாறு ஆளுநர் பேசினார்.

கடந்த 2-ம் தேதி மதுரையில் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் அர்லேகர், ‘‘வைகை ஆற்றை யாரும் சீரமைக்காவிட்டால், ஆளுநர் மாளிகையே களமிறங்கும்’’ என்று தெரிவித்தார். அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டமும் நடத்தினார். அவர் அரசியலமைப்புச் சட்ட வரைமுறைகளை மீறி, ஆட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாக அமைச்சர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் விமர்சனங்களை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.