Main Menu

இந்தியாவில் பொருளாதார தேக்க நிலை: எச்சரிக்கும் சர்வதேச நாணய நிதியம்

இந்தியா குறிப்பிடத்தகுந்த பொருளாதார தேக்க நிலைகளுக்கு இடையில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சமீப ஆண்டுகளின் வளர்ச்சியில் அதற்குத் தகுந்த முறைசார் தொழில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை எனவும் உழைப்புச் சந்தை பங்கேற்பும் பெரிய அளவில் சரிவு கண்டுள்ளது என்றும் நிதியத்தின் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

நேற்று (திங்கட்கிழமை) வொஷிங்டனில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், “உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா மில்லியன் மக்களை வறுமையிலிருந்து மீட்டிருந்தாலும், சமீபத்திய தொழிலாளர் சந்தை தரவுகளின் படி வேலையின்மை கடுமையாக அதிகரித்துள்ளது.

மற்றும் உழைப்புச் சந்தை பங்கேற்பு என்பது கடுமையாக சரிந்துள்ளதுடன் குறிப்பாக பெண்களின் வேலையின்மை அதிகரித்துள்ளது.

நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியின்மையினால் இந்தியாவின் இளம் உழைப்புச் சக்திகள் வீணடிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது” என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அரசுக் கட்டுப்பாடுகளில் எந்த ஒரு நிச்சயமும் இல்லாததால் முதலீடும், நுகர்வுச் சக்தியும் சரிந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் இந்தியத் தலைவர் ரணில் சல்காடோ செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் கடன் விரிவாக்கச் சரிவு, பரந்துபட்ட அளவில் கடன் அளிப்பதில் இருக்கும் இறுக்கம் மற்றும் உள்ளார்ந்த சீர்த்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றான தேசம் முழுதுமான சரக்கு மற்றும் சேவை வரி அமுலாக்கத்தில் உள்ள குறைபாடுகள் ஆகியவையும் பொருளாதார தேக்க நிலைக்கு பங்களிப்புச் செய்துள்ளன.

ஒரு குறிப்பிடத்தகுந்த பொருளாதார தேக்க நிலைகளில் இந்தியா சிக்கியுள்ளது. இதனால் இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி விகிதங்களை ஐ.எம்.எஃப். குறைத்துக் கணிக்க வேண்டிய நிலையில் உள்ளது.

மேலும் வளர்ச்சி இயந்திரத்தை மேலும் வலுவூட்ட வேண்டுமெனில் பொருளாதாரத்தில் நம்பிக்கை ஊட்டுவதற்கான வழிமுறைகள் வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...