Main Menu

ஆப்கானில் இரண்டு ஜனாதிபதிகள் பதவியேற்பு: மீண்டும் உள்நாட்டு போர் உருவாகும் அபாயம்?

ஆப்கானிஸ்தானில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டுள்ளதால், அங்கு மீண்டும் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நீண்ட இழுபறிக்கு பின்னர் இரண்டாவது முறையாக தேர்தலில் வெற்றி பெற்ற அஷ்ரப் கானி, நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

அந்நாட்டு அரசின் உயரதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு தூதர்கள் முன்னிலையில் அவர் பதவியேற்றுக் கொண்டார்.

இதேபோல, அஷ்ரப் கானியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவிய வேட்பாளரான அப்துல்லா அப்துல்லாவும் காபுல் நகரில் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் ஆப்கானிஸ்கான் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார்.

இந்த இரு பதவி ஏற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்ற அதே வேளையில் காபுல் நகரில் இரு சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதன்போது அச்சமடைந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர்.

எனினும், சம்பவ இடத்தில் அசராது நின்று உரையாற்றிய அஷ்ரப் கனி ‘நான், குண்டு துளைக்காத உடை அணியவில்லை; இந்நாட்டிற்காக என் உயிரையும் கொடுப்பேன்,’ என கூறினார்.

சமீபத்தில், அமெரிக்கா – தலிபான் இடையே, ஆப்கான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து, உள்நாட்டு போர் ஓய்ந்து, அங்கு சமூக பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய, நோர்வேயில், இன்று இரு தரப்பு பேச்சு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இரு தலைவர்களின் மோதல், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக உள்ள அஷ்ரப் கானி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா போட்டியிட்டார்.

வாக்குச்சீட்டு முறையில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஜனாதிபதி அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை பெற்று இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

ஆனால், இந்த தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ஆகையால் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என அப்துல்லா அப்துல்லா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து, செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் எண்ணும் பணியை அந்நாட்டு தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.

இந்நிலையில், இரண்டாவது முறையாக எண்ணப்பட்ட வாக்குகளிலும் 50.64 சதவீதம் வாக்குகளை பெற்று அஷ்ரப் கானி வெற்றி பெற்றதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 18ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.

பகிரவும்...