Main Menu

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்தி: 27பேர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை குணப்படுத்த மது அருந்தலாம் என்ற வதந்திகளுக்குப் பின்னர் ஈரானில் மெத்தனால் அருந்திய இருபத்தேழு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிர்களை காவு கொண்டுவரும் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மது அருந்தலாம் என்ற வதந்தி கடந்த சில நாட்களாக வைரலாக பரவிவருகின்றது.

இந்தநிலையில் இந்த வதந்திகளை நம்பி மெத்தனால் அருந்திய 218 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குஜெஸ்தானின் தலைநகரான அஹ்வாஸில் உள்ள ஜுண்டிஷாபூர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலி எஹ்சான்பூர் தெரிவித்துள்ளார்.

மது அருந்துவது கொரோனா வைரஸுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என்ற வதந்திகளால் இந்த விஷம் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

சில முஸ்லிம் அல்லாத மத சிறுபான்மையினரைத் தவிர அனைவருக்கும் ஈரானில் மது குடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் ஈரானில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் தற்காலிகமாக சுமார் 70,000 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மனிதர்களுக்கு வழங்க கூடிய நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள் எதுவும் இப்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே, கொரோனா வைரஸை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைத் தடுப்பதே இப்போதைக்கு இருக்கும் ஒரே தெரிவு.

மேலும், இருமல் அல்லது காய்ச்சல் அறிகுறி இருக்கும் நபர்களின் நேரடி தொடர்பை தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

பகிரவும்...