Main Menu

அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடு: மனதளவில் இரண்டு நாடுகள்- ஸ்ரீதரன் சுட்டிக்காட்டு

அரச இயந்திரத்தால் ஒருமித்த நாடாகவும் மனதளவில் இரண்டு நாடுகளாகவும் இலங்கை இருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணியில் கலந்துகொண்டமைக்காக கிளிநொச்சி பொலிஸாரினால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயத்தில் வைத்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. குறித்த வாக்கு மூலத்தில் பொலிஸாரின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த நாட்டிலே தமிழர்களின் காணிகள் முப்படைகளால் வன்பறிப்புச் செய்யப்பட்டிருக்கிறது. தொல்லியல் திணைக்களம் என்ற பெயரிலும் வனவளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவை ஊடாகவும் காணிகள் சுவீகரிப்புச் செய்யப்படுகின்றன.

இலங்கையில் பௌத்த விகாரைக்காக காணிகள் உறுதியோடு வழங்கப்படுகின்றன. ஆலயங்களுக்கு குத்தகை முறையிலேதான் வழங்கப்படுகின்றது. முப்படையினரினைப் பயன்படுத்தி ஒரு தேசமாக இலங்கையை ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்களே தவிர, மனதளவில் இரண்டு நாடுகளாகவே இலங்கை இருக்கிறது. அந்த வகையில் தான் அரசாங்கமும் செயற்படுகிறது.

இதேவேளை, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்கூட இந்த நாட்டிலே தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே இடம்பெற்றது. குறித்த போராட்டமானது வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்திற்கான அழைப்பு எமக்கு எவராலும் தனித்து விடப்படவில்லை. நாம் பத்திரிகையில் வெளியான செய்திகளை அடிப்படையாக வைத்தே பேரணியில் கலந்துகொண்டோம்.

நாம் இந்தப் போராட்டத்தினை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தும் வகையிலோ, இலங்கை இறையாண்மைக்கு எதிராகவோ, ஆயுத வழியிலோ போராடவில்லை. அரச இயந்திரங்களால் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்காகவும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவுமே அமைதி வழியில் போராட்டம் நடத்தபட்டது.

சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வராத கொரோனா தொற்று, தமிழர்கள் நடத்தும் போராட்டத்திலா வரப்போகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனிடம், சுமார் ஒன்றரை மணித்தியாலங்களுக்கு பொலிஸாரால் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...