Main Menu

அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புக்கள்: பாதிப்பு 18 இலட்சத்தை எட்டுகிறது!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் அமெரிக்காவில் தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன. இன்று ஈஸ்ரர் பண்டிகை நாள் என்றநிலையில் உலக நாடுகளில் கிறிஸ்தவர்கள் பண்டிகையை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடி வருகின்றனர்.

இவ்வாறிருக்க, இத்தாலியில் ஏற்பட்ட மரணங்களை விட இப்போது அமெரிக்காவில் அதிக மரணம் ஏற்பட்டு உலக அளவில் மரணித்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்துக்கு வந்துள்ளது.

அந்தவகையில் இத்தாலியில் 19 ஆயிரத்து 468 ஆக மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் அமெரிக்காவில் 20 ஆயிரத்து 577 பேர் மரணித்துள்ளனர்.

சீனாவில் வுஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்ந்தும் மனிதர்களைப் பலியெடுத்து வருகின்றது.

இந்த வரைஸ் மூத்த பிரஜைகளை அதிகமாகப் பாதித்துள்ள நிலையில் இதுவரை உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டோரே அதிகம் உயிரிழந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளன.

இதுவரை உலக நாடுகள் முழுவதும் 17 இலட்சத்து 80 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த சில நாட்களில் குணமடைந்து வெளியேறுவோரும் அதிகமாகப் பதிவாகியுள்ள நிலையில் இதுவரை 4 இலட்சத்து 4 ஆயிரத்து 31 பேர் வீடுதிரும்பியுள்ளனர் என்பது ஆறுதல் அளிக்கின்றது.

இதேவேளை, நேற்று ஒரே நாளில் மட்டும் 6 ஆயிரத்து 95 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்தமாக நேற்று 80 ஆயிரத்து 908 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறிருக்க அமெரிக்காவில் நேற்றும் அதிக உயிரிழப்புப் பதிவாகியுள்ளதுடன் ஒரேநாளில் மட்டும் ஆயிரத்து 830 பேர் மரணித்தநிலையில் புதிதாக 30 ஆயிரத்து 3 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளது.

அந்நாட்டில் இதுவரை 5 இலட்சத்து 32 ஆயிரத்து 879 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய நாடுகளை விடவும் அங்கு கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி பன்மடங்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோரக் மாநிலத்தில் உலக நாடுகளை விடவும் மொத்த பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 80 ஆயிரம் பேருக்கு்ம மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நேற்று மட்டும் அங்கு 783 பேர் உயிரிழந்துள்ளதடன் நியூஜெர்ஸி மாகாணத்தில் 251 பேர் மரணித்துள்ளனர். இதனைவிட மிச்சிக்கன் மாகாணத்தில் 111 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, அமெரிக்காவில் பாதிப்பு பன்மடங்காக இருக்கின்றபோதும் குணமடைந்து வெளியோறுவோரின் எண்ணிக்கையும் ஓப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகிறது. அங்கு 30 ஆயிரத்து 453 பேர் குணமடைந்துள்ள அதேவேளை 11 ஆயிரத்து 471 பேர் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் தொடர்ந்தும் அதிக மனித இழப்புக்களை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நேற்று மட்டும் அந்நாடுகளில் 3 ஆயிரத்து 562 பேர் மரணித்துள்ளனர்.

அத்துடன், அந்நாடுகளில் நேற்று 32 ஆயிரத்து 790 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 8 இலட்சத்து 52 ஆயிரத்து 899 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனைவிட மொத்த உயிரிழப்புக்கள் ஐரோப்பிய நாடுகளிலேயே அதிகம் என்பதுடன் இதுவரை 73 ஆயிரத்து 625 பேர் மரணித்துள்ளதுடள் 59 ஆயிரத்து 109 பேர் குணமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பிய நாடுகளில், இத்தாலியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நேற்று மட்டும் 619 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன் நேற்று அங்கு 4 ஆயிரத்து 694 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 52 ஆயிரத்து 271 ஆகக் காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனாவைக் கட்டுப்படுத்த மக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ள நிலையில் இன்று இத்தாலியில் ஈஸ்டர் தின கொண்டாட்டங்களும் பொலிவிழந்து காணப்படுகின்றன.

மேலும், ஸ்பெயினிலும் தீவிரமாகப் பரவியுள்ள கொரோனா வைரஸ் நேற்று ஒரேநாளில் 525 பேரைப் பலியெடுத்துள்ளது. அங்கு மொத்தமாக ஒரு இலட்சத்து 63 ஆயிரத்து 27 பேர் இதுவரை வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் மொத்த மரணங்கள் 16 ஆயிரத்து 606 ஆகப் பதிவாகியுள்ளன.

மேலும், நேற்று 4 ஆயிரத்து 754 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 87 ஆயிரத்து 312 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். எனினும் ஏனைய நாடுகளை விடவும் அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகம் என்பதுடன் இதுவரை 59 ஆயிரத்து 109 பேர் வீடுதிரும்பியுள்ளமை பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரான்ஸில் நேற்று மட்டும் 635 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 13 ஆயிரத்து 832 ஆகப் பதிவாகியுள்ளன. அங்கு, நேற்று 4 ஆயிரத்து 785 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 654 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பிரித்தானியாவில் பெரும் மனித இழப்புக்களை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் நேற்றுமட்டும் 917 பேரின் உயிரைப் பறித்துள்ளது.

மேலும், நேற்று 5 ஆயிரத்து 233 புதிய நோயாளர்கள் அடையாளம்காணப்பட்டு மொத்த பாதிப்பு 78 ஆயிரத்து 991 ஆகப் பதிவாகியுள்ளதுடன் மொத்த மரணங்கள் 9 ஆயிரத்து 875 ஆக உள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து குணமடைவோர் பிரித்தானியாவில் மிகக் குறைவாகவே உள்ள நிலையில் இதுவரை 344 பேர வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைவிட, ஜேர்மனியில் தொடர்ந்தும் நூறு பேருக்கும் மேல் உயிரழந்துவரும் நிலையில் நேற்றும் 135 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு புதிய நோயாளர்கள் நேற்று 3 ஆயிரத்து 281 பேர் இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்தமாக ஒரு இலட்சத்து 25 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. எனினும் 57 ஆயிரத்து 400 குணமடைந்துள்ளனர்.

இதேவேளை, மற்றுமொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் தொடர்ந்தும் நூற்றுக்கணக்கானவர்கள் மரணித்துவருவதுடன் நேற்று மட்டும் 327 பேரை கொரோனா பலியெடுத்துள்ளது.

இதனைவிட நெதர்லாந்தில் 132 பேரும் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்பு 2 ஆயிரத்து 643 ஆகப் பதிவாகியுள்ளது. மேலும், சுவிற்ஸர்லாந்தில் 34 பேரும், போர்த்துக்கலில் 35 பேரும் அயர்லாந்தில் 33 பேரும் மரணித்துள்ள அதேவேளை, பொலந்தில் 27 பேரும் ரோமானியாவில் 21 பேரும் நேற்று உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கனடாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில நேற்றுமட்டும் 84 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 653 ஆகப் பதிவாகியுள்ளன.

இதேவேளை, ஆசியாவில் கொரோனாவின் தாக்கம் கட்டுப்பாட்டுக்குள் இதுவரை உள்ள நிலையில் நேற்று மொத்தமாகவே 373 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.

இதில், அதிகபட்சமாக ஈரானில் நேற்று 125 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் துருக்கியில் 95 பேரும் இந்தியாவில் 39 பேரும், பாகிஸ்தானில் 20 பேரும் நேற்று மரணித்துள்ளதுடன் பிலிப்பைன்ஸில் 26 பேரும் இந்தோனேஷியாவில் 21 பேரும் நேற்று மரணித்துள்ளமை பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஆபிரிக்க நாடுகளில் நேற்று 48 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்த மரணங்களே அங்கு 745 ஆக உள்ள நிலையில் வைரஸ் பரவல் அங்கு தொடர்ந்தும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக நேற்று அல்ஜீரியாவில் 19 பேர் மரணித்துள்ளனர்.

இவ்வாறிருக்கையில், சீனாவில் நேற்று 46 பேருக்கு கொரோனா தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் 3 பேரின் மரணங்களும் பதிவாகியுள்ளன.

அங்கு இதுவரை 81 ஆயிரத்து 953 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்து 339 பேர் மரணித்தும் 77 ஆயிரத்து 525 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...