Main Menu

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – சீனாவைக் கடுமையாக சாடும் ட்ரம்ப்

கொரோனா வைரஸ் அமெரிக்காவுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்நியைலில், இதனை காணும் போது சீனா மீதான தனது கோபம் மேலும் அதிகரிக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “தொற்றுநோய் அதன் அசிங்கமான முகத்தை உலகம் முழுவதும் பரப்புகிறது. அமெரிக்காவிற்கு பெரும் சேதம் ஏற்படுத்தியுள்ளது. இதனை பார்க்கும்போது நான் சீனா மீது மேலும் மேலும் கோபமடைகிறேன். மக்கள் அதனை பார்ப்பார்கள். நான் அதனை உணர்கிறேன்” என கூறியுள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மிகப்பெரிய அளவில் 47 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.3 இலட்சமாக உள்ளது. தற்போது தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் நோய் பாதிப்பு தீவிரமடைந்துள்ளது.

இது குறித்து தொற்றுநோய் நிபுணரும் அரசின் ஆலோசகருமான அந்தோனி பவுசி, விடயம் தற்போது கை மீறிவிட்டது. நாம் தவறான திசையில் சென்று கொண்டு இருக்கிறோம் என எச்சரித்துள்ளார்.

தொற்றுநோயை கட்டுப்படுத்த அதிகாரிகளும் பொதுமக்களும் நடவடிக்கை எடுக்கத் தவறினால் ஒரு நாளைக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார்.

இதேநேரம் அமெரிக்கா – சீனா இடையே நீடித்து வரும் வர்த்தக போரை கொரோனா வைரஸ் தொற்றுநோய் தீவிரமாக்கியுள்ளது.

வெளிப்படைத்தன்மை இல்லை என சீனா மீது அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. பதிலுக்கு சீனா, நோயைக் கையாளத் தெரியாமல் அதனை திசைத்திருப்புவதற்காக ட்ரம்பின் நிர்வாகம் தொற்றுநோயை அரசியலாக்குவதாக குற்றம் சாட்டியுள்ளது.

இவ்வாறான நிலையில், இந்த ருவிட்டர் பதிவின் மூலம் ட்ரம்ப் மீண்டும் சீனாவை சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...