Main Menu

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் பிறந்த தினம் இன்று

“தமிழும் சைவமும் என் இரண்டு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன்கொள்வதே என் கடன்; அவை வாழப் பணிபுரிவதே என் வாழ்வின் குறிக்கோள்” என்று சொல்லி அதன்வழி வாழ்ந்தவர் ஆறுமுக நாவலர். அவருடைய பிறந்த தினம் இன்று.

ஆறுமுக நாவலர் யாழ்ப்பாணம், நல்லூர் என்னும் ஊரில் 1822 டிசம்பர் 18 இல் (சித்திரபானு ஆண்டு மார்கழி  புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில் கந்தப்பிள்ளை – சிவகாமி அம்மையார் தம்பதிகளுக்கு இறுதி மகவாகப் பிறந்தார். நாவலரின் இயற்பெயர் ஆறுமுகம்பிள்ளை என்பதாகும். தகப்பனார் ப. கந்தப்பிள்ளை, பேரன் பரமானந்தர், பூட்டன் இலங்கைக்காவல முதலியார் ஆகிய அனைவரும் தமிழ் அறிஞர்கள். அரசாங்கத்தில் வேலை பார்த்தவர்கள். நாவலருக்கு நான்கு மூத்த சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சகோதரர்கள் நால்வரும் அரசாங்க உத்தியோகத்தர்கள். சகோதரிகளுள் ஒருவர் வித்துவசிரோமணி பொன்னம்பல பிள்ளை அவர்களின் தாயார்.

ஐந்தாவது வயதில் வித்தியாரம்பம் செய்யப்பெற்ற நாவலர், நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களையும் தமிழையும் கற்றார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். மூத்த தமையனாரால் முதலில் சரவணமுத்துப் புலவரிடமும் பின்னர் அவரது குருவாகிய சேனாதிராச முதலியாரிடமும் உயர்கல்வி கற்க அனுப்பப்பட்டார். பன்னிரண்டாவது வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளைக் கற்றுப் புலமை பெற்றார்.

யாழ்ப்பாணத்தில் அக்காலத்திலிருந்த முன்னணி ஆங்கிலப் பாடசாலையான மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையில் (இக்காலத்து யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி) கற்று ஆங்கிலத்திலும் திறமை பெற்றார். அவரது 19வது வயதில்(1841) அப்பாடசாலையில் ஆசிரியராகப் பணியேற்ற நாவலர், அப்பாடசாலையின் நிறுவனராயும், அதிபராயுமிருந்த பேர்சிவல் பாதிரியார் கிறித்தவ விவிலியத்தைத் தமிழில் மொழி பெயர்க்கும் வேலைக்கு உதவியாக இருந்து பணியாற்றினார். பேர்சிவல் பாதிரியருடன் சென்னைப்பட்டணம் சென்று அச்சிடுவித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பினார்.

ஓலைச்சுவடியில் இருந்த தமிழ், கரையான்களாலும் செல்களாலும் அழிவதைக் கண்டு மனம் வருத்தப்பட்ட ஆறுமுக நாவலர், அதைப் பதிப்பிக்கும் பணியில் களமிறங்கினார். ஓலைச்சுவடியில் இருந்த தமிழை அப்படியே பதிப்பிக்காமல், அதனைப் பல பிரதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அதன்பிறகே பதிப்பித்தார். அவர் பதிப்பித்த நூல்களில் அனைத்தும் அதாவது, பக்க எண்கள்கூடத் தமிழ் எண்களாகவே இருக்கும். அதுபோல, பதிப்பித்த ஆண்டும் மாதமும் தமிழிலேயே இருக்கும். இப்படி அவர் பதிப்பித்த நூல்கள் 46. எழுதிய நூல்கள் 24.
தமிழுக்காகத் தம் இறுதிமூச்சுவரை வாழ்ந்த ஆறுமுக நாவலர், “கல்வியை விரும்பும் ஏழைக் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பது பெரும் புண்ணியம்” என்று வலியுறுத்தினார். இதுகுறித்து ‘புத்தகம்’  என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில், “கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்களுக்கும், கல்வியிலே நன்கு தேர்ச்சியடைந்த ஆசிரியர்களுக்கும், இனி கற்க முயல்பவர்களுமாகிய எல்லாருக்கும் புத்தகங்கள் இன்றியமையாதவை. புத்தகங்கள் இன்றிக் கற்கப் புகுவோர் கோலின்றி நடக்கக் கருதிய குருடர்போல் ஆவர். யாதாயினும் ஒரு தொழிலைச் செய்பவனுக்கு அதனைச் செய்வதற்குரிய ஆயுதம் இன்றியமையாததுபோல, கல்வி கற்கும் மாணவர்களுக்கு அதனைக் கற்றலுக்குரிய புத்தகம் இன்றியமையாததேயாகும். ஆதலால், கல்வியை விரும்பிக் கற்கும் மாணவர்கள் புத்தகங்களைச் சம்பாதித்து, அவற்றைக் கிழிக்காமலும் அழுக்குப் படியாமலும், கெட்டுப் போகாமலும் பாதுகாத்து வைத்துப் படித்தல் வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது அன்றையக் காலத்திலேயே நன்கு ஆங்கிலப் புலமை பெற்றிருந்த ஆறுமுக நாவலர், ஒருமுறை சென்னைக் கடற்கரையில் நடந்து சென்றபோது, அருகிலிருந்த குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இந்த வழக்குச் சம்பந்தமாக சாட்சியம் அளிக்க வேண்டித் தன் சீடர்களுடன் நீதிமன்றத்துக்குச் சென்றிருந்தார். அங்கு நீதிபதியிடம், தன் தரப்பு விஷயங்களை ஆறுமுக நாவலர் ஆங்கிலத்திலேயே சொல்ல ஆரம்பித்தார். இவர் ஆங்கிலத்தில் பேசுவதைக் கண்டு பொறாமைப்பட்ட அந்த ஆங்கிலேய நீதிபதி… ஆறுமுக நாவலரிடம், “நீங்கள் தமிழிலேயே சொல்லுங்கள்; அதை, நீதிமன்ற அதிகாரி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறுவார்” என்று உத்தரவிட்டார்.

ஆறுமுக நாவலரும் சரியென ஒப்புக்கொண்டு, “அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்றுக் காலோட்டப்புக்குழி” என்று தொடங்கினார். அவரின் செந்தமிழின் பேச்சைக் கேட்டு, அதை மொழிபெயர்க்க முடியாமல் ஆங்கிலேய மொழிபெயர்ப்பாளர் திணறிப்போனார். கோபமுற்ற நீதிபதி, மீண்டும் ஆறுமுக நாவலரிடம் ஆங்கிலத்தில் பேசக் கூறி உத்தரவிட்டார். ஆனால், ஆறுமுக நாவலரோ மறுத்து தமிழிலேயே கூறினார். அவர் சொன்னதை அவரது சீடர், மொழிபெயர்த்துக் கூறினார். “சூரியன் தோன்றுவதற்கு நான்கு நாழிகை முன்னர், கடற்கரையோரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது” என்பதுதான் ஆறுமுக நாவலர் கூறியதற்கு அர்த்தம்.

“வறுமைக்கும் துன்பத்துக்கும் சகல பாவங்களுக்கும் பிறப்பிடம் மதுபானம்தான்”  என்பதை 1874-ம் ஆண்டு வெளியிட்ட ‘இலங்கைப் பூமி சரித்திரம்’ நூலில் தெளிவுப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அந்த நூலில், “மதுபானம் மூலம் ஆங்கிலேயருக்கு ஆண்டுக்குப் பல லட்ச ரூபாய் வருமானம் வருகிறது. ஆங்கிலேயர், தமக்குச் சாராயத்தால் எய்தும் பொருளைப் பிறவாயில்கள் சிலவற்றால் எய்துவிக்கத் தலைப்பட்டுக்கொண்டு சாராயத்தை ஒழிப்பாராயின், இலங்கை மக்கள் செல்வமும் ஆரோக்கியமும் அடைவார்கள்” என்று மதுவுக்கு எதிராக அன்றே குரல்கொடுத்துள்ளார்.

அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள நல்லூரில் (1822) பிறந்தார். குடும்பத்தில் பலரும் தமிழ் அறிஞர்கள். ஆரம்பக் கல்வி வீட்டிலேயே தொடங்கியது. நல்லூர் சுப்பிரமணிய உபாத்தியாயரிடம் நீதிநூல்களைக் கற்றார். 9 வயதில் தந்தை இறந்தார்.

l சரவணமுத்து புலவர், சேனாதிராச முதலியாரிடம் குருகுல முறையில் உயர் கல்வி பயின்றார். தமிழ் இலக்கியம், இலக்கணம், சாஸ்திரங்கள், சிவாகமங்களைக் கற்றார். சிறு வயதிலேயே தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். தலைசிறந்த எழுத்தாளர். நல்ல பேச்சாற்றல் கொண்டவர்.

l யாழ்ப்பாணம் மெதடிஸ்த ஆங்கில பாடசாலையில் (மத்திய கல்லூரி) 20-வது வயதில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். அதன் நிறுவனர் பேர்சிவல் பாதிரியாருக்கு பைபிளைத் தமிழாக்கம் செய்வதில் உறுதுணையாக இருந்தார்.

l வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

l சமயக்குரவர்களின் பாடல்களை சுவடியில் இருந்து தொகுத்துப் புத்தகமாக அச்சிட்டார். தன் வீட்டுத் திண்ணையில் பல மாணவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தார். சைவப் பிரகாச வித்யாசாலை என்ற பாடசாலையைத் தொடங்கினார்.

l சைவ சமய வளர்ச்சியில் கவனம் செலுத்துவதற்காக, ஆசிரியர் பணியை 1848-ல் துறந்தார். அச்சு இயந்திரம் வாங்க 1849-ல் சென்னை வந்தார். திருவாவடுதுறை ஆதீனத்தில் சைவப் பிரசங்கம் செய்து நாவலர் பட்டம் பெற்றார். சூடாமணி, நிகண்டுரை, சவுந்தர்ய லஹரியை பதிப்பித்தார்.

l தன் வீட்டிலேயே அச்சுக்கூடம் நிறுவி, பாலபாடம், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன் உரை, சிவாலய தரிசன விதி, சைவ சமய சாரம், நன்னூல் விருத்தியுரை உள்ளிட்ட பல நூல்களை அச்சிட்டார். பெரிய புராணத்தை வசன நடையில் எழுதி அச்சிட்டார். ஏடுகளாக இருந்த பல நூல்களை அச்சிலேற்றினார். பரிமேலழகர் உரையை முதலில் பதிப்பித்தவர்.

l ஒருமுறை சென்னை கடற்கரையில் இவர் நடந்து சென்றபோது, அருகே உள்ள குடிசையில் தீப்பிடித்துவிட்டது. இதுசம்பந்தமாக நீதிமன்றத்தில் சாட்சி அளிக்கவேண்டி இருந்தது. ஆங்கிலத்தில் பேச முற்பட்ட இவரை நீதிபதி தடுத்து, தமிழிலேயே பேசுமாறும், அதை நீதிமன்ற அதிகாரிதான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறவேண்டும் என்றும் கூறினார்.

l உடனே நாவலர், ‘‘அஞ்ஞான்று எல்லிஎழ நானாழிப் போதின்வாய் ஆழிவரம் பனைத்தே காலேற்று காலோட்டப்புக்குழி’’ என்றார். மொழிபெயர்ப்பாளர் திணறிவிட்டார். ‘சரி சரி, ஆங்கிலத்திலேயே கூறுங்கள்’ என்று நீதிபதி சொல்ல, மறுத்த நாவலர், ‘சூரியன் உதிப்பதற்கு நான்கு நாழிகை முன்னர் கடற்கரை ஓரம் காற்று வாங்கச் சிறுநடைக்குப் புறப்பட்டபோது’ என்று தெரிவித்தாராம்.

l 20-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். 8 நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். ஏழைகளுக்கு இலவச நூல்களோடு இலவசக் கல்வியும் வழங்கி தாய்மொழியில் கல்வி கற்கச் செய்த நாவலர் பெருமான் 57-வது வயதில் (1879 Dec 05) மறைந்தார்.

பகிரவும்...