புலம்பெயர் உறவுகளின் உதவிகள் எதிர்கால சவால்களை வெற்றிகொள்ள பயன்படுகிறது. – ஆனந்தன் எம்.பி பேச்சு
புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியுதவியை வழங்கும் நல்லுள்ளங்களும், நாமும்
உங்களிடமிருந்து பெரிதும் எதிர்பார்ப்பது, கிடைக்கும் இத்தகைய உதவிகளை
சரிவரப்பயன்படுத்தி கல்வியில் சிறந்த தேர்ச்சிகளைப்பெற்று அதனூடாக நீங்கள்
உங்கள் குடும்ப வறுமைகளை போக்கி அனைத்து சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டும்
என்பதேயாகும்.
வறுமையையும், எதிர்கால சவால்களையும் வெற்றிகொள்ள வேண்டுமாகவிருந்தால்,
விடாமுயற்சி தன்னம்பிக்கையுடன் கல்வியை நீங்கள் தொடர வேண்டும். கல்வி ஒன்றே
உங்களை எதிர்காலத்தில் நல்ல பிரஜைகளாக உருவாக்கும்.
வவுனியா கனகராயன்குளம் பிரதேசத்தின் கல்மடு, குஞ்சுக்குளம், பெரியகுளம்,
கொல்லர்புளியங்குளம், ஆலங்குளம், பண்டாரவன்னியன் றோட், இராமனூர்,
குறிசுட்டகுளம், மன்னகுளம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த வறுமைக்கோட்டுக்கு கீழ்
வாழும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கும்போதே, வன்னி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் தினம் அன்று (25.12) நடைபெற்ற இந்த நிகழ்வில் வடமாகாணசபை
உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா, கிறிஸ்தவ மதப்பிரமுகர்
ரவிச்சந்திரன், வவுனியா தெற்கு கல்வி வலய அபிவிருத்தி உத்தியோகத்தர்
நித்தியானந்தராஜா ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை
கையளித்தனர்.
கற்றல் உபகரணங்களுக்கான நிதியுதவியை புலம்பெயர்ந்து வாழும் உறவுகளான
திரு.மோகனதாஸ், திருமதி விமலாசந்திரன், திரு.லாலாரவி, திருமதி கந்தையா
கந்தமலர் ஆகியோர் பிரான்ஸ் ரி.ஆர்.ரி வானொலி ஊடாக வழங்கியிருந்தனர். ரி.ஆர்.ரி
வானொலிக்கும், நிதியுதவியை வழங்கியோருக்கும் மாணவர்களும், அவர்களின்
பெற்றோர்களும் தமது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.
பகிரவும்...