புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி காலமானார்!
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வழங்கிய புகழ்பெற்ற தீர்ப்பு தொடர்பான வழக்கின் மனுதாரரான துறவி கேசவானந்த பாரதி (வயது-79) காலமானார்.
அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளில் இவரது வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பே அடிப்படையாக மேற்கோள் காட்டப்படுகிறது.
கேரளா, காசர்கோட்டில் உள்ள இடநீர் மடத்தில் வயதுமூப்பு தொடர்பான நோய்கள் காரணமாக அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கேரள நில சீர்திருத்தச் சட்டத்துக்கு எதிராக 1970-களில் அவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கியது. உச்ச நீதிமன்றத்தில் அமைக்கப்பட்ட அமர்வுகளில் இதுவே அதிகபட்ச நீதிபதிகளைக் கொண்ட அமர்வாகும்.
1972 ஒக்டோபர் 31இல் தொடங்கிய விசாரணை 1973 மார்ச் 23இல் நிறைவு பெற்றது. மொத்தம் 68 நாட்கள் விசாரணை நடைபெற்றது. அதன் பின்னர், பல வழக்குகளில் இந்த வழக்கின் தீர்ப்பே மேற்கோள் காட்டப்பட்டது.
ஆதிசங்கரரின் முதல் சீடர்களில் ஒருவரான தோடகாசார்யரினால் கேரளாவின் காசர்கோட்டில் இடநீர் சங்கர மடமாகும் நிறுவப்பட்டது. சுமார் 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த மடத்தின் பீடாதிபதியாக கேசவானந்த பாரதி இருந்துவந்தார்.
இந்நிலையில், கேசவானந்த பாரதியின் மரணம் குறித்து குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஆன்மிகத் தலைவர்களில் மிகவும் முக்கியமான ஒருவரை இழந்துள்ளோம் எனவும் அவரது வாழ்க்கை இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக விளங்கும் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கய்ய நாயுடு வெளியிட்ட இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமூக சேவை, தாழ்த்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்கு அவர் ஆற்றிய பணிகளுக்காக அவரை நாம் என்றும் நினைவுகூர்வோம் என்றும் இந்தியாவின் வளமான கலாசாரத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவர் ஆழமாக நேசித்தார் எனவும் பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...