தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி – மரண தண்டனைக்கு வாய்ப்பு
தாய்லாந்தில் கடலுக்குள் வீடு கட்டிய காதல் ஜோடி, இறையாண்மையை மீறி விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதையடுத்து அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்தவர் சாட் எல்வர்டோஸ்கி. இவர் பிட்காயின் முதலீட்டாளர். இவரது தாய்லாந்து காதலி சுப்ரானே தெப்பெட். இவரும் பிட்காயின் முதலீட்டாளர் ஆவார்.
கோடீஸ்வரர்களான இருவரும் தாய்லாந்தில் கடலுக்குள் கான்கிரீட் வீடு கட்டியுள்ளனர். கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் இதன் போட்டோ வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீட்டை தாய்லாந்து கடற்படையினர் கண்டுபிடித்து புகெட் போலீசில் புகார் செய்தனர். அனுமதி பெறாமலும், தாய்லாந்து இறையான்மையை மீறியும் கடலுக்குள் இந்த வீடு கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வீடு கடற்கரையில் இருந்து 13 நாட்டிகல் தொலைவில் கட்டப்பட்டுள்ளது. தாய்லாந்து கடல் எல்லைக்கு அப்பால் இது உள்ளது. எனவே தாய்லாந்தின் இறையான்மையை மீறவில்லை. என சாட் எல்வார்டோஸ் கி தெரிவித்தார்.
எனது காதலி சுப்ரானே எங்காவது சுதந்திரமாக வாழ வேண்டும் என விரும்பினார். அவருக்காக வித்தியாசமாக கடலுக்குள் வீடு கட்டினேன் என்றும் அவர் கூறினார். தாய்லாந்தின் இறையாண்மைக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது.