Main Menu

சீனா தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதில் தீவிர முயற்சி

விமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

விமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின் கோமாக் (கம்மர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா) நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

விமான உற்பத்தி துறையில் உலகளவில் முன்னணியிலுள்ள போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு சீனாவின் அரசுத்துறை நிறுவனமான கோமாக்கின் விமானங்கள் கடும் போட்டியளிக்கும் என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

“சீன திறனை குறைத்து மதிப்பிடாதீர்கள். அமெரிக்காவையும், ஐரோப்பாவையும் மையமாக கொண்ட விமான உற்பத்தித்துறை மெதுவாக இடம் பெயர ஆரம்பித்திருக்கிறது. எதிர்காலத்தில் அந்த இடம் சீனவாக கூட இருக்க வாய்ப்புண்டு” என்று கூறுகிறார் விமானப் போக்குவரத்துத்துறை வல்லுநர் ஷுகோர் யூசப்.

கோமாக் எவ்விதமான விமானங்களை உற்பத்தி செய்கிறது?

சீனாவின் பொதுத்துறை விமான உற்பத்தி நிறுவனமான கோமாக், இதுவரை ஏஆர்ஜே21 மற்றும் சி919 ஆகிய இரண்டு விமானங்களை தயாரித்துள்ள நிலையில், மூன்றாவது விமானத்தை ரஷ்யாவுடன் இணைந்து தயாரித்து வருகிறது.

அவற்றில் 90 இருக்கைகளை கொண்ட ஏஆர்ஜே21 ரக விமானம் மட்டும்தான் பல்வேறு சர்ச்சைகளை கடந்து தற்போது பயன்பாட்டில் உள்ளது. இருப்பினும், போயிங் நிறுவனத்தின் வெற்றிகரமான விமான ரகமான 737 மாக்ஸ், ஏர்பஸ் ஏ320 நியோ ஆகியவற்றிற்கு போட்டியாக 168 இருக்கைகளை கொண்ட சி919 விமானத்தை கோமாக் தயாரித்து வருகிறது.

விமான உற்பத்தித்துறையில் களமிறங்கிய சீனா - போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா?
Image captionஏஆர்ஜே21 ரக விமானம்

இதுவரை மூன்றுமுறை பரிசோதனை செய்யப்பட்டுள்ள இந்த வகை விமானம், 2021ஆம் ஆண்டு விற்பனைக்கு வரவுள்ளது. இதுவரை எத்தனை விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து அறிவதற்காக கோமாக் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொண்டபோது பதிலேதும் கிடைக்கவில்லை. இருப்பினும் ஃப்ரோஸ்ட் & சல்லிவன் என்னும் சந்தை நிறுவனத்தின் தரவுகளை பார்க்கும்போது, இதுவரை கிட்டத்தட்ட 1,000 சி919 ரக விமானங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான முன்பதிவுகளை சீனாவை சேர்ந்த குறைந்த விலை விமான போக்குவரத்து நிறுவனங்களே மேற்கொண்டிருந்தன.

தற்போதுள்ள சூழ்நிலையை பார்க்கும்போது, ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டதை போன்று 2021ஆம் இந்த விமானம் பயன்பாட்டுக்கு வருமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இந்நிலையில், 280 பயணிகளுடன் சுமார் 12,000 கிலோ மீட்டர்கள் தொடர்ந்து பறக்கக்கூடிய சிஆர்929 என்னும் விமானத்தை தயாரிக்கும் பணியில் ரஷ்யாவுடன் சேர்ந்த சீனா தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கோமாக்கின் எங்கெல்லாம் பறக்கும்?

விமான உற்பத்தித்துறையில் களமிறங்கிய சீனா - போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா?

தற்போதைக்கு கோமாக் தயாரிக்கும் விமானங்களுக்கு சீனாவின் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பு மட்டுமே ஒப்புதல் வழங்கியுள்ளது. இதையடுத்து கோமாக் தயாரிக்கும் விமானங்கள் ஆசியாவின் சில பகுதிகள், ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற சீனாவின் ஒப்புதலை அங்கீகரிக்கும் பகுதிகளில் இந்த வகை விமானங்கள் பறக்கலாம்.

இருப்பினும், உலகம் முழுவதும் தான் தயாரித்த விமானங்கள் பறப்பதற்கு விரும்பும் கோமாக், அதை சாதிப்பதற்கு முதலில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய விமான கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் ஒப்புதலை பெற வேண்டியிருக்கும்.

ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளிடம் ஒப்புதலை பெறுவதென்பது தற்போதைக்கு கோமாக்குக்கு எட்டாக் கனி என்று கூறுகிறார் பிளைட் குளோபல் ஏசியா நிறுவனத்தின் ஆசிரியர் எல்லிஸ் டைலர்.

அமெரிக்கா, ஐரோப்பாவின் ஒப்புதலின்றி கோமாக்கால் செயல்பட முடியுமா?

விமான உற்பத்தித்துறையில் களமிறங்கிய சீனா - போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா?

நீண்டகால அடிப்படையில் கூட, கோமாக் நிறுவனத்துக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயல்படுத்தற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என்றாலும் கூட, அந்நிறுவனத்தால் நிலைத்திருக்க முடியும். ஏனெனில், அடுத்த ஆண்டின் மத்திய பகுதியில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி அதிக விமானப் பயணிகளை கொண்ட உலகின் முதல் நாடாக சீனா உருவெடுக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

மேலும், உலகின் மிகப் பெரிய விமான உற்பத்தி நிறுவனமான போயிங் சமீப காலத்தில் சந்தித்து வரும் பிரச்சனைகள், சர்வதேச அளவில் கோமாக்கின் தேவையை அதிகரிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் ‘எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ்’ விமான நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மாக்ஸ் 8 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் 157 பேர் உயிரிழந்தனர். அதே போன்று கடந்த அக்டோபர் மாதம் ‘லயன் ஏர்’ விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

-bbc