Main Menu

சீனா, இந்தியா இடையே விவாதப் புள்ளியாக மாறிய சிறிலங்கா – ஹிந்துஸ்தான் ரைம்ஸ்

கெட்டவாய்ப்பு மற்றும் குறைவான கணிப்பீடு போன்ற காரணிகளினால்,  இந்தியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் சிறிலங்கா ஒரு விவாதப் புள்ளியாக மாறியுள்ளது. சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்தில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் தரித்து நின்றமையால் மட்டும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் இராணுவ சார் முரண்பாடுகள் ஏற்படவில்லை.

சிறிலங்காவானது கேந்திர அரசியல் முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தைக் கொண்டுள்ளது. சிறிய நாடுகள் தவிர்க்க வேண்டிய இரு விடயங்களை சிறிலங்கா கைக்கொண்டது.

முதலாவது, சிறிலங்கா தனது உள்நாட்டிற்குள் எழுந்த சிறுபான்மைத் தமிழ் மக்கள் தொடர்பான அரசியல் பிரச்சினையைத் தீர்க்குமாறு இந்தியாவால் வழங்கப்பட்ட அழுத்தத்தை முறியடிப்பதற்காக , சீனாவின் உதவியை நாடியது.

இரண்டாவதாக, சீனாவிடமிருந்து பல பில்லியன்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் உள்நாட்டில் தனக்கான அதிகாரத்துவத்தை உத்தரவாதப்படுத்த முடியும் என சிறிலங்காவின் அரசியல் தலைமைத்துவத்தின் ஒரு பகுதி தீர்மானித்தது.

சிறிலங்காவால் கைக்கொள்ளப்பட்ட இவ்விரு விடயங்களுமே இந்தியா இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்குக் காலாக இருந்தது. இதன் காரணமாக சீனாவிடமிருந்து சிறிலங்கா அதிக வட்டியில் கடனைப் பெற்றது. அத்துடன் பொருளாதார ரீதியில் பயனற்ற சில கட்டுமானத் திட்டங்களை சீனா, சிறிலங்காவில் மேற்கொள்வதற்கும் காரணமாக அமைந்தது.

சிறிலங்கா மீதான சீனாவின் இத்தகைய தலையீடானது உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் சிறிலங்காவின் மீது அதிகூடிய கவனத்தைக் குவிப்பதற்கு வழிவகுத்தது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ‘முதலில் அயல்நாடு’ என்கின்ற தனது கோட்பாட்டை மையப்படுத்தி இதுவரை இரண்டு தடவைகள் சிறிலங்காவுக்கு  உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் காலத்தில், சிறிலங்கா தான் எதிர்கொண்ட தனது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக சீனாவையே நாடிநின்றது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் சிறிலங்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாகவே மைத்திரிபால சிறிசேன, சிறிலங்காவின் அதிபராக வருவதற்கு இந்தியா உதவியது.

ஆனால் சிறிலங்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் சீனாவால் இதன் மீது சுமத்தப்பட்ட பாரிய கடன்தொகையிலிருந்து சிறிலங்காவால் வெளிவர முடியவில்லை. இதுவே மேலும் சிறிலங்காவில் சீனா பிரசன்னமாவதைத் தடுக்க முடியாமைக்கான காரணமாக அமைந்துள்ளது.

இந்தியாவின் பதிலானது பொருத்தமான வகையில் அளவீடு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்கா தன் மீதான கடன்சுமையைக் குறைப்பதற்கு உதவுவதில் இந்தியா தயக்கம் காண்பித்துள்ளது. ஆனால் சிறிலங்கா மீதான கடன்சுமைக்கு அப்பால், இந்த நாடு வளர்ச்சியடைவதற்கான சில திட்டங்களையும் முதலீடுகளையும் மேற்கொள்வதற்கான உடன்பாடுகளில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது.

சீனாவின் கடன் சுமையைக் குறைப்பதற்காக தனது நிலப்பரப்பை சீனாவிற்கு நீண்டகால குத்தகைக்கு வழங்குவதற்கு சிறிலங்கா தீர்மானித்த போது அதனை அங்குள்ள மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சீனாவின் பட்டுப்பாதைத் திட்டத்தை மேற்கொள்வதற்கு உடன்பட்ட ஏனைய நாடுகளுக்கு சிறிலங்கா தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் எச்சரிக்கை மணியை எழுப்பியுள்ளது.

சிறிலங்காவிற்கு அண்மையில் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பௌத்த மாநாடு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அதன் பின்னர் இவர் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.

பிரதமர் மோடி இவ்விரு சமூகங்களிடமிருந்தும் நற்பெயரை எடுப்பதற்காகவே இவ்விரு சந்திப்பையும் மேற்கொண்டிருந்தார். சிறிலங்காவில் தொடரப்பட்ட  உள்நாட்டு யுத்தமானது முடிவிற்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் தற்போது தமிழ் மற்றும் சிங்கள சமூகங்களிற்கு இடையிலும் நல்லிணக்கம் உருவாக்கப்படுகிறது.

ஆகவே மூன்றாம் நாடுகளை அங்குள்ள இன வேறுபாடுகளை வைத்து நோக்காது அந்த நாடுகள் மீது நன்மை பயக்கும் கோட்பாடுகளைப் பிரயோகிக்க வேண்டும் என்பதை சிறிலங்காவில் இடம்பெற்று முடிந்த கசப்பான உள்நாட்டு யுத்தம் சுட்டிநிற்கிறது.

ஆகவே சிறிலங்காவுடன் இந்தியா பரஸ்பர உறவுகளை மேலும் பலப்படுத்திக் கொள்வதற்கு இவ்வாறான பல்வேறு உத்தியோகபூர்வ பயணங்கள் மேற்கொள்ளப்படுவதுடன் சிறிலங்கா மீது இந்தியா கணிசமானளவு கவனத்தைக் குவிக்க வேண்டிய தேவையேற்படும்.

வழிமூலம்       – Hindustan Times  (ஆசிரியர் தலையங்கம்)
மொழியாக்கம் – நித்தியபாரதி

பகிரவும்...