சிங்கப்பூரில் லஞ்ச புகாரில் இந்தியருக்கு சிறை!
சிங்கப்பூரின் கிழக்கு பிராந்தியத்தில் சாங்கி விமான நிலையம் உள்ளது. இங்குள்ள தனியார் பார்சல் நிறுவனத்தில் 2015 முதல் 2016 வரை வேலை பார்த்து வந்தவர் ஹிதேஸ்குமார் சந்துபாய் படேல் (வயது 37). இந்தியர்.
இவர் பயணிகளிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட எடையைவிட அதிகமான பார்சல்களை விமானத்தில் அனுப்பி வந்துள்ளார். விமான நிலையத்தில் அதிகாரிகள் ரகசிய ஆய்வு நடத்தியபோது, ஹிதேஸ்குமார் சந்துபாய் படேலின் சதி அம்பலமானது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு, சிங்கப்பூர் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
விசாரணையில் ஹிதேஸ்குமார் சந்துபாய் படேல் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, அவருக்கு 8 வார சிறை தண்டனையும், 800 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40 ஆயிரம்) அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.