கொரிய தீபகற்பத்தின் நிலையான அமைதியை வலியுறுத்திய ஐ.நா. நினைவுக் கல்லறை
கொரிய தீபகற்பத்தில் காணப்படுகின்ற போர் மேகங்கள் மற்றுமொரு பாரிய உலக அழிவை நோக்கியதா என்ற அச்சம் அமைதியை விரும்பும் நாடுகள் மத்தியில் காணப்படுகின்றது. அந்த பகுதியில் நிலையான அமைதி உருவாக வேண்டும் என்பதே கொரிய மக்களின் பிரார்த்தனையாக காணப்படுகின்றது.
எரிகின்ற தீயில் எண்ணெய் ஊற்றும் வகையில் சுயநல நாடுகள் மீண்டும் கொரிய மண்ணை பயன்படுத்தினால் அங்கு வாழ் மக்கள் மாத்திரம் அல்ல உலகில் ஏனைய நாடுகளில் வாழும் மக்களுக்கும் அதன் தாக்கம் காணப்படும். எவ்வாறாயினும் போர் குறித்த அனுபவம் இலங்கையில் வாழும் எமக்கும் உள்ளது. மூன்று தசாப்தகால உள்நாட்டு போரில் பல இலட்சம் உயிர்களை பலிகொடுத்தும் இன்னும் பல்லாயிரம் உறவுகளை தொலைத்தும் விட்டுள்ளோம். ஒரு நாட்டில் வாழும் இரு இனங்கள் இலங்கையில் போரிட்டுக் கொண்டன. ஆனால் கொரியாவில் ஒரே இனம் வடக்கு– தெற்கு என பிரிந்து போரிட்டது.
உலக வரலாற்றில் கொரிய போரை மிகவும் வலிமையானதும் உயிரிழப்புக்கள் நிறைந்த போர் என்றும் கூறப்படுகின்றது. உலகில் பிளவுபட்ட ஒரே நாடு கொரியாவாகவே காணப்படுகின்றது. ஒரே இன மக்கள் கொரியா என்ற பரந்த பூமியில் வடக்கு -– தெற்கு என பிரிந்து போரிடுகின்றனர். உதவி என்ற போர்வையில் இரு பகுதியையும் போருக்கு தயார்படுத்தும் வகையில் சில நாடுகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
அதேபோன்று உலகில் சில நாடுகளில் தற்போது காணப்படும் போர், மக்கள் அழிவை கண்முன்னே காட்டுகின்றது. உதாரணமாக சிரியா மீதான தாக்குதல்களை கூறலாம். வன்மையான நவீன ஆயுதங்களை கொண்டு மக்களை அழித்தாளும் நிலையினையே பல போர்கள் எடுத்துக்காட்டுகின்றன.
இந்நிலையில் வட மற்றும் தென் கொரியாவுக்கிடையில் மீண்டும் ஒரு போர் உருவாகுமா என்ற அச்ச நிலை காணப்படுகின்றது. இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் பல ஆரோக்கியமான நிலைமையை தோற்றுவித்தாலும் குறிப்பிட்ட சில நாடுகளின் செயற்பாடுகள் கொரிய தீபகற்பத்தில் போர் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அமைகின்றது.
ஜனநாயக மக்களின் கொரியக் குடியரசு என்று பெயரைக் கொண்டுள்ள வட கொரியாவின் தலைநகரம் பியாங் கியாங் ஆகும். தென் கொரியாவைவிட அதிக பரப்பளவு கொண்டது என்றாலும் வட கொரியாவில் மக்கள் தொகை மிகக்குறைவாகும்.
ஏதேனும் ஒரு நாடு செயற்கைக்கோளை விண்ெவளிக்கு அனுப்பினால் அது குறித்து பல்வேறு கருத்துக்களை ஏனைய உலக நாடுகள் முன் வைப்பது பொதுவான விடயமாகும். அது விமர்சனமாகக்கூட அமையலாம். இவ்வாறானதொரு நிலையில் 2012 டிசம்பர் 12 அன்று வடகொரியா ஒரு புதிய செயற்கைக்கோளை விண்ெவளிக்கு அனுப்பியது. பல நாடுகள் இதைக் கண்டித்தன. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இந்தச் செயற்கைக்கோளை போருக்கான ஒத்திகை என்றவாறு பிரசாரம் செய்தன.
வடகொரியா ஏதேனும் பிறநாடுகளினால் ஆக்கிரமிக்கப்பட்டால் சீனா தனது இராணுவத்தை அனுப்பி பாது காக்கும் என்ற ஒப்பந்தநிலை காணப்பட்ட போதிலும் சீனாவும் வடகொரியாவின் செயற்கைக்கோள் விவகாரத்தில் கண்டனத்தை வெளியிட்டது. ஐக்கிய நாடுகள் சபையிலும் வடகொரியாவின் விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியது. அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தொழில் நுட்பத்தை பரிசோதனை செய்வதற்காகவே செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில் நாங்கள் ஆர்வம் காட்டுவதாக வடகொரியா தனது உறுதியான நிலைப்பாட்டை அறிவித்தது.
ஒரு காலகட்டத்தில் சீனாவின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்த கொரியா, பின்னர் சுமார் 35 வருடங்கள் ஜப்பானின் அதிகார ஆக்கிரமிப்புக்குள் அடங்கிக் கிடந்தது. அப்போது கொரியா ஒரே நாடா கத்தான் காணப்பட்டது. வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிவினை இருக்க வில்லை.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் கொரியாவின் மீதான அதிகாரத்தை நீக்கிக்கொண்டது. ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட்ட கொரியா சுதந்திரக் காற்றை சுவாசிக்க முன்னர் கொரியா வின் வடபகுதியூடாக ரஷ்யா உள்நுழைந்தது. இதனால் அதிருப்திகொண்ட அமெரிக்கா தனது இராணுவத்தை கொரியாவின் தென்பகுதிக்கு அனுப்பியது. இந்த இரண்டு தரப்புமே கொரியாவின் இரு முனையிலும் முன்னெடுத்த அத்துமீறல்கள் அந்த நாட்டின் தலைவிதியை மாற்றியது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்த இரு துருவங்களின் கையில் சிக்கிய கொரியா பிளவுபட்டு துண்டாடப்பட்டது. தான் ஆக்கிரமித்துக்கொண்ட வடக்குப் பகுதியை கம்யூனிஸப் பாதையில் ரஷ்யா அழைத்து சென்றது. அமெரிக்காவோ தென்கொரியாவை ஜனநாயகப் பாதையில் இட்டுச்சென்றது.
அமெரிக்க ஆதரவில் செயற்பட்ட கொரியாவின் தென்பகுதி மக்கள், கம்யூனிஸ ஆட்சிக்கு எதிரான கொள்கையில் இருந்தனர். வடக்கு மற்றும் தெற்கு என எப்போது பார்த்தாலும் போர் மேகங்கள் எல்லைப் பகுதிகளில் நிலைகொண்டிருக்கும். ஏனெனில் இரு தரப்பில் உள்ள படைகளும் அவ்வப்போது எல்லை மீறி தாக்குதல்களை நடத்தியமை பிளவுபட்ட பின்னரும் நிலையான அமைதிக்கு அச்சுறுத்தலாகவே காணப்பட்டது.
இவ்வாறானதொரு நிலையிலேயே கொரியாவின் வடக்குப் பகுதியில் நிலை கொண்டிருந்த இராணுவம் தென் பகுதியில் நுழைந்தது. இதுவே கொரிய மக் களை மிகவும் கொடுமையாக அழித்தொழித்த போராகவும் பரிணாமம் பெற்றது.
கொரியப் போர் உலகின் மிக மோசமான போர்களில் ஒன்று எனக்கூறப்படுகின்றது. ஆனால் ஒரே நாட்டில் இரண்டாக பிளவுபட்ட மக்களுக்கு இடையிலான உள்நாட்டு விவகாரம் என்றே இந்த போர் பிற்காலத்தில் கூறப்பட்டது. கொரியாவை வடக்கு மற்றும் தெற்கு என பிரித்து அதனை போர் பயிற்சி களமாக அமெரிக்க மற்றும் ரஷ்யா அன்று சுயநலமாக பயன்படுத்திக்கொண்டுள்ளன.
வடக்கு மற்றும் தெற்கு மோதிய கொரியப் போரில் அமைதியை நிலை நாட்ட முதன்முறையாக ஐக்கிய நாடுகள் சபை இராணுவத்தை அனுப்பியது. பேர ழிவை ஏற்படுத்திய கொரிய போரில் இதுவொரு திருப்பு முனையாகும். உலக அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தாது அமைதியாக இருங்கள் என்ற தகவலை ஐக்கிய நாடுகள் சபை வட கொரியாவிற்கு அனுப்பியது. ஆனால் ஐ.நா.வின் செய்தியை உதாசீனம் செய்யும் வகையில் வட கொரிய தென்பகுதியை நோக்கி தாக்குதல்களை தொடர்ந்தது.
உறுப்பு நாடுகளின் இராணுவ ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபை அவசர கடிதத்தை அனுப்பியது. இதற்கு பதிலளிக்கும் வகையில் 16 நாடுகள் தங்கள் இராணுவத்தை அனுப்பியது. இன்னும் சில நாடுகள் போர் தளபாடங்களை வழங்கியது. 80 வீதமான அமெரிக்க படை வீரர்களின் பங்களிப்புடன் கொரிய போர் பெரும் மனித அழிவை நோக்கி நகர்த்தப்பட்டது. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் பங்குபற்றி அனுபவம் வாய்ந்த வோல்டன் வாக்கர் என்ற அமெரிக்க படை தளபதி ஐ.நா. இராணுவத்திற்கு தலைமை தாங்கினார்.
தென்பகுதியில் இருந்து கொரியாவின் வடக்கு பகுதியை நோக்கி ஐ.நா. இராணுவம் போருக்கு தயாரானபோது சீனா தனது இராணுவத்தை வடகொரியாவுக்கு ஆதரவாகக் களம் இறக்கியது. மறுபுறம் ரஷ்யா என தற்போது அழைக்கப்படும் அன்றைய சோவியத் யூனியன் பெரும் தொகையான போர்க் கருவிகளை வட கொரியாவுக்குள் நகர்த்தியது.
1949 ஆம் ஆண்டு செப்டெம்பரில் ரஷ்யா தனது முதலாவது அணுகுண்டை வெற்றிகரமாக சோதனையிட்டிருந்தது. போரில் தனது பலத்தை மிகவும் நிரூபிக்க ஆர்வத்துடன் ரஷ்யா செயற்பட்டது. தனது ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் வடகொரியாவில் போர் தளபாடங்களை ரஷ்யா குவித்தது. 1950 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 ஆம் திகதி கொரிய போர் தொடங்கியது.
இந்த போரில் தென்கொரிய இராணுவம் கடும் இழப்புக்களை சந்தித்தது. 21 நாடுகளின் பங்களிப்புடன் போரில் களமிறங்கியும் ஐ.நா. இராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்து பின்வாங்கியது. தென் கொரியாவின் ஒரே இயற்கை துறைமுக மான பூசான் வரையில் பின்வாங்கியது. ரஷ்யாவின் போர் ஆயுதங்கள் தென் கொரிய நிலப்பரப்புகளில் கடுமையான தாக்குதல்களை மேற்கொள்கையில் சீன இராணுவம் யாலு நதி ஊடாக வட கொரியாவின் உதவிக்கு வந்தது. இதன் காரணமாக ஐ.நா. இராணுவம் மிகவும் மோசமான நிலைமையில் பின்வாங்கியது.
பூசான் பகுதியை இழந்து விடக்கூடாது என்பதில் உறுதியுடன் நின்று ஐ. நா. படை போரை எதிர்கொண்டது. ஜூலை 29 ஆம் திகதி போரின் உச்சக்கட்டத்தை சந்தித்தபோது, வெற்றி அல்லது வீர மரணம் என்று ஐ. நா. இராணுவத்திற்கு தளபதி வோல்டன் வாக்கர் அன்று வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றினார். நேரத்துடன் போரிட்டுக்கொண்டிருக்கிறோம். இதற்கு மேல் சிறிதும் பின்வாங்க முடியாது. பின்வாங்க பின்புறமாக எந்தப்பகுதியும் இல்லை என்றே மனதில் கொள்ளுவோம். புசனையும் தாண்டி பின்வாங்கினால் அது சரித்திரத்தின் மாபெரும் தற்கொலைகளில் ஒன்றாகிவிடும். இறுதிவரை போராடுவோம். அணியாக போரிடுவோம். இந்தப் பகுதியிலிருந்து ஓரடி கூட பின்வாங்கக்கூடாது. விரைவில் வெல்வோம் என்று உணர்ச்சிபூர்வமாக வீரர்களுக்கு மத்தியில் உரையாற்றினார்.
தென்கொரியா முழுவதும் போர் மேகத்தின் கருமை சூழ்ந்தது. தொடர்ந்தும் கடுமையான போர். எதிரணிகள் மீதான இலக்குகளை குறி வைத்து ஐ. நா. இராணுவம் முன்னேறியது. இரு தரப்பிலும் இழப்புகள் அதிகமாகவே காணப்பட்டன.
இந்த போரில் பதினாறு இலட்சம் கம்யூனிஸ்டுகள் இறந்தனர் அல்லது காணாமலாக்கப்பட்டனர் என்று கூறப்படுகின்றது. அல்லது தொலைந்தனர். தென் கொரிய இராணுவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை பல இலட்சமெனவும் கூறப்படுகின்றது. அதேபோன்று போரில் அப்பாவித் தென்கொரிய மக்களிலும் பத்து இலட்சம் பேர் பலியானதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இன்றும் மாறுபட்ட கருத்துக்கள் காணப்படுகின்றது.
கொரிய போர் மூன்று வருடங்கள் இடம்பெற்று 1953 ஜூலை மாதம் 27 ஆம் திகதி ஒரு வழியாக நிறைவிற்கு வந்தது. எந்தத் தரப்பிற்குமே முழுமையான வெற்றி இல்லை. மறுபுறம் நிரந்தரமான சமாதான ஒப்பந்தம் எதுவுமேயில்லாமல் ஒரு முடிவுக்கு வந்த போர் கொரியப் போரெனவும் கருதப்படுகின்றது. அந்த கொரிய போர் சுவடுகளை தாங்கியதாக ஐ. நா. நினைவு கல்லறை தென் கொரியாவின் பூசான் நகரில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் உலக ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பன்னாட்டு ஊடகவியலாளர்களுக்கும் இந்த கல்லறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
மீண்டும் கொரிய மண்ணில் போர் இடம்பெறக்கூடாது. கொரியாவிற்கு மாத் திரம் அல்ல உலக அமைதிக்கும் ஆபத்து என்பதை பன்னாடுகளுக்கும் உணர்த்தும் வகையிலேயே தென் கொரியாவின் சியோல் நகரில் உலக ஊடகவியலாளர் மாநாடு இம்முறை நடாத்தப்பட்டது. அவ் வாறே கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதி உருவாக பிரார்த்திப்போம்.
( லியோ நிரோஷ தர்ஷன் )
பகிரவும்...