கொங்கோ நாட்டில் ‘செல்பி’க்கு அடிமையான கொரில்லாக்கள்
கொங்கோ நாட்டில் நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.
மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள காங்கோ நாட்டின் கிழக்கு பகுதியில் விருங்கா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு கொரில்லா வகை குரங்குகள் பாதுகாக் கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, என்பவர் கொரில்லாக்கள் குட்டிகளாக இருக்கும் போதே, அவற்றுடன் விதவிதமாக ‘செல்பி’ எடுப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவரின் இந்த பழக்கமானது அங்குள்ள நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்களை ‘செல்பி’க்கு அடிமையாக்கிவிட்டது. மேத்யூ ஷவாமு செல்போனை தூக்கினாலே அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக வந்து போட்டோக்களுக்கு ‘போஸ்’ கொடுக்கின்றன.
அது மட்டும் இன்றி அந்த 2 கொரில்லாக்களும், ‘செல்பி’க்கு போஸ் கொடுக்கிற போது மனிதர்களை போலவே விதவிதமாக முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. அந்த வகையில், மேத்யூ ஷவாமு அண்மையில் அந்த 2 கொரில்லாக்களுடன் எடுத்த ‘செல்பி’ படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.
இதனை ஆச்சரியத்துடன் பார்க்கும் மக்கள் அதிக அளவில் இந்த படங்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த படம் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது.