கற்றல் உபகரணங்களுக்கு நிதியுதவி வழங்கிய லண்டன் வாழ் தமிழர் யோகானந்தம் (ஜெயா)
வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குள்பட்ட நெடுங்கேணி பிரதேசத்தில் மிகவும் வறுமை நிலைக்குள்பட்டுள்ள பாடசாலை செல்லும் ஐநூற்று ஐம்பது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. ஒலுமடு அ.த.க.பாடசாலை, சேனைப்புலவு உமையாள் வித்தியாலயம் இவ்விரண்டு பாடசாலைகளினதும் கல்விச்சமுகத்தின் வேண்டுகோளுக்கமைய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கற்றல் உபகரணங்களை வழங்கினார்.
புலம்பெயர்ந்து லண்டனில் வசிக்கும் தாயக உறவான யோகானந்தம் (ஜெயா) அவர்கள் கற்றல் உபகரணங்களுக்கான நிதியுதவியை வழங்கியிருந்தார். குறித்த பாடசாலைகளின் அதிபர்கள் விமலேந்திரன், அரவிந்தன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இவ்விருநிகழ்வுகளிலும் வடமாகாணசபை உறுப்பினர்கள், எம்.தியாகராசா, இ.இந்திரராசா, வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர்கள் பூபாலசிங்கம், மகாலிங்கம், செந்தூரன், வவுனியா சிக்கன கடனுதவி கூட்டுறவுச்சங்கத்தின் வெளிக்கள அலுவலர் ஜெயந்தன், வவுனியா வர்த்தகர் செல்வஉதயன், நாடாளுமன்ற உறுப்பினரின் வெளிக்கள அலுவலர் பரமேஸ்வரன் ஆகியோரும், குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தின் பிரதிநிதிகள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய ஆனந்தன் எம்.பி,
நெடுங்கேணி பிரதேசம் போர்க்காலத்தில் முழுமையான அழிவுகளையும் இடப்பெயர்வுகளையும் சந்தித்த பிரதேசம் ஆகையால், இங்கு கல்வி கற்கும் மாணவர்கள் தாய் தந்தை உறவினர்களை இழந்துள்ளனர்.
இம்மாணவர்கள் தமது எதிர்கால வாழ்க்கையை ஒழுங்கமைத்துக்கொள்ள அவர்களுக்கு கல்வி ஒன்றே சிறந்த தெரிவாகும். இந்தத்தெரிவை பிரகாசமாக்குவதற்காக லண்டனைச்சேர்ந்த திரு.ஜெயா அவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்கு தேவையான உபகரணங்களை பெற்றுக்கொள்வதற்கு நிதியுதவி வழங்கியுள்ளார். அவரது இந்த உயரிய நோக்கத்துக்காக கல்விச்சமுகத்தின் சார்பில் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேவேளை ஒவ்வொரு ஆண்டும் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாகவும், புலம்பெயர்ந்து வாழும் உறவுகளின் நிதிப்பங்களிப்பு ஊடாகவும் கல்வித்துறைக்கே அதிகளவான நிதியை ஒதுக்கி வந்துள்ளமையையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்திக்கொள்ள விரும்புவதாகவும், இதிலிருந்து கல்வியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் விளங்கிக்கொண்டு கற்றல் செயல்பாடுகளில் கூடியளவு கவனம் செலுத்தி சிறந்த அடைவுகளை காண வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
பகிரவும்...