Main Menu

உலகவாழ் இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு!

உலகவாழ் இந்துக்களால் இன்று (வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு உரிய மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாந்தம் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்படும்.

இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிரளய காலத்தில் பிரம்மனும் அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்துவிட்ட நிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்த நாளாக சிவராத்திரியை இதிகாசங்கள் கூறுகின்றன.

சிவராத்திரியன்று சிவ வழிபாட்டில் ஈடுபட்டால் வாழ்வில் துன்பங்கள் நீங்கி, இன்பம் பெறலாம் என்பது ஐதீகம்.

சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே செய்த பாவங்களும் நம்மைவிட்டு நீங்கிப் போகும் என்பது இந்துக்களில் நம்பிக்கையாகும்.

சிவராத்திரி விரதத்தால் நமது புலன்களை வென்று மனதை அடக்கி நீண்ட ஆயுள், உடல் ஆரோக்கியம் பெறலாம் என கருதப்படுகின்றது.

இவ்வாறு 24 வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் சிவகதி அடைய முடியும் என்பதுடன், மூவேழு தலைமுறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடையலாம் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

சிவராத்திரி விரதத்தினை முன்னிட்டு, இன்று ஆலயங்களில் 04 யாம பூசைகளும் விசேட வழிபாடுகளும் இடம்பெறுகின்றன.

இலங்கையைப் பொறுத்தமட்டில், இன்றைய தினம் நாட்டில் உள்ள சிவ தலங்கள் உள்ளிட்ட ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

கொரோனா வைரஸ் பரவலைக் கருத்திற்கொண்டு, மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூஜை வழிபாடுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares