Main Menu

ரமலானை வரவேற்போம்

மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது.

உலக மக்களை நல்வழிப்படுத்த வந்த மார்க்கம் இஸ்லாம். கலிமா, தொழுகை, நோன்பு, ஜக்காத் மற்றும் ஹஜ் ஆகிய முக்கிய கடமைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதில் குறிப்படத்தக்கது ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதத்தில் வரும் ரமலான் நோன்பு.

மனிதனை பாவத்தில் இருந்து மீட்கவும், பாவமன்னிப்பு பெறவும், தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு வாரி வழங்கி இறைவனின் திருப்பொருத்தத்தை பெறவும் இந்த புனித ரமலான் நோன்பு வழிகாட்டுகிறது. இத்தனை சிறப்பு மிக்க புண்ணியங்கள் தரும் ரமலானை நாம் வரவேற்போம்.

நோன்பு குறித்து திருக்குர்ஆனில் குறிப்பிடும் போது ஈமான் கொண்டோரே, உங்களுக்கு முன் உள்ள சமூகத்தாருக்கு கடமை ஆக்கப்பட்டது போல உங்களின் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்ளச்சம், பயபக்தி உடையவர்களாக வேண்டும் என்பதற்காக” என்று இறைவன் (திருக்குர்ஆன் 2:183) குறிப்பிடுகின்றான்.

ரமலான் நோன்பின் சிறப்பு குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹசாத் ஸல்மானுல் பார்சி (ரலி) இவ்வாறு குறிப்பிடுகிறார்.

ரமலானுக்கு முந்தைய ஷபான் மாதத்தில் கடைசி நாட்களில் ஒருநாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்: ’ இறை நம்பிக்கையாளர்களே அபிவிருத்தி கொண்ட மகத்தான மாதம் உங்களுக்கு வர உள்ளது. அம்மாதத்தில் ஓர் இரவு உண்டு. அந்த இரவில் வணங்கினால் ஆயிரம் மாதம் வணங்கிய நம்மை உங்களுக்கு உண்டு. 

அம்மாதத்தில் பகல் காலங்களில் உண்ணாமல் பருகாமல் இருப்பதை உங்கள் மீது இறைவன் கடமையாக்கியுள்ளான். இரவில் நின்று வணங்குவதை உபரியானதாக ஆக்கியுள்ளான். இந்த மாதத்தில் ஒருவர் கடமையான ஒரு செயலைச்செய்தால் மற்ற மாதங்களில் 70 கடமையான செயல்களை செய்தால் என்ன நன்மை உண்டோ அந்த நன்மையைப்பெற்றுக்கொள்வார்.

இது பொறுமையின் மாதம், பொறுமையின் வெகுமதி சொர்க்கம் ஆகும். சொந்த பந்தங்களுடன் இணங்கி வாழ வேண்டும் என மனிதர்களை அறிவுறுத்தும் மாதமாகும். இந்த மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறப்பதற்கான உணவு கொடுத்தால், அந்த உணவைக்கொடுத்தவருக்கு பாவ மன்னிப்பும், நரகத்தில் இருந்து விடுதலையும் கிடைக்கும். மேலும் நோன்பாளிக்கு இறைவனிடம் என்ன நன்மை உண்டோ அந்த அளவு நன்மையும் பெற்றுக்கொள்வார்.

இநத் மாதத்தின் முதல் 10 நாட்கள் அருள்பொழியும் நாட்கள், அடுத்த 10 நாட்கள் பாவ மன்னிப்பு கிடைக்கும் நாட்கள், கடைசி 10 நாட்கள் நரகத்தில் இருந்து விடுதலை பெறத்தகுதியான நாட்கள் என்று நபிகளார் கூறினார்கள்.

பகிரவும்...