Main Menu

இன்று சித்திரை மாத அமாவாசை விரதம்

சித்திரை மாத அமாவாசை தினமான இன்று விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும்.

மாதங்கள் கொண்ட தமிழ் வருட கணக்கில் முதலாவதாக வரும் மாதம் சித்திரை மாதமாகும். இந்த மாதத்தில் வரும் தினங்கள், திதிகள் அனைத்தும் சிறப்பானதாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சித்திரை மாத அமாவாசையான இன்று விரதம் இருந்து செய்ய வேண்டியது என்ன என்பதையும் தெரிந்து கொள்ளலாம். 

சித்திரை மாத அமாவாசையான இன்று காலையில் குளித்து முடித்து, விரதத்தை ஆரம்பித்து ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மைத்ர முகூர்த்த நேரம் எனப்படும் அதிகாலை நேரத்தில் வேதியர்களை கொண்டு மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதி, தர்ப்பணம் தர இயலாதவர்கள் இன்று உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும். 

இந்த தினத்தில் விரதம் மேற்கொண்டு முன்னோர்களை வழிபடுவதால் பித்ரு சாபம், குல சாபம் போன்றவை நீங்கி நன்மை ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் தமிழ் வருடத்தின் தொடக்க மாதமான சித்திரை அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிகாய் வாங்கி, உங்கள் தொழில், வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும். 

இந்த சித்திரை மாத அமாவாசையில் மேற்கண்டவற்றை செய்வதால் எடுக்கும் முயற்சிகளில் தொடர்ந்து ஏற்பட்டு வந்த தடை, தாமதங்கள் நீங்கும். திருமணமாகாமல் தாமதம் ஆனவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் விரைவில் நடக்கும். படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்களுக்கு, அவர்கள் விரும்பிய வண்ணம் வேலை விரைவில் கிடைக்கும். வீட்டில் இருக்கும் தரித்திர நிலை நீங்கி, பொன், பொருள் போன்றவற்றின் சேர்க்கை அதிகரிக்கும். நீண்ட நாள் நோய்கள் நீங்கப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படும்.

பகிரவும்...