Main Menu

காவியை ஏன் நிராகரித்தார் வள்ளலார்?

ந்து மதத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது காவி நிறம்.  இந்துமத துறவிகளும், பக்தர்களும் காவி உடையினையே அணிந்து வருகிறார்கள்.  இதில், வள்ளலார் மட்டும் விதிவிலக்காக இருந்தார்.  காவி உடையினை தவிர்த்து அவர் வெள்ளாடைத்துறவியாக மாறியது ஏன்? 

இந்து மதத்தின் மூடப்பழக்க வழக்கங்களை எல்லாம் சாடியவர் வள்ளலார்.  மூடப்பழக்க வழக்கங்களில் இருந்து மக்களை மீட்கவும் போராடினார்.  பொதுவாகவே சாதி,மத பேதங்களால் மனித இனம் சிதறுண்டு கிடப்பதைக்கண்டு மனம் நொந்து,  சாதி,மத அரசியலை வேரறுக்க வேண்டும் என்று நினைத்து, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை துவக்கி,  ஒரு பெரிய புரட்சிக்கான வித்து போட்ட ஞானி ஆயிற்றே.  அவர் எப்படி  வழக்கமாக துறவிகள் உடுத்தும் காவி உடையை  உடுத்துவார்? ஆடை விசயத்தில் அவர் புதிய பாதையை போட்டுக்கொண்டார்.  

வள்ளலார் என்ன சொல்கிறார்?

காவியை விடுத்து எதற்காக வெள்ளை ஆடையை தேர்ந்தெடுத்தார் என்பதை வள்ளாலாரின் உபதேசத்தின் மூலமாகவே அறியலாம்.  திருவருட்பா உரைநடைப்பகுதியில்,

’’மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.  மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை.
சந்நியாசி காவிவேஷ்டி போடுவதற்கு ஞாயம்:
தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது; தத்துவத்தை ஜெயித்து தயவை கடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி.  வெற்றியான பிறகு அடைவது தயவு.  ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை.
தயவு வெள்ளை என்பதற்கு ஞாயம்:-
தயவென்பது சத்துவம்.  சத்துவ மென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மல மென்பது வெள்ளை வருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானம் என்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.
நித்தியத் துறவென்பது:
அறம், பொருள், இன்பம், வீடு – இந்த நான்கையும் நித்தியம் நான்கு காலங்களிலும் செய்து அனுபவித்துப் பற்றற்று இருப்பதே நித்தியத்தை அடைவதற்கு ஏதுவாக இருக்கிறது.’’என்று அவர் உபதேசம் செய்திருக்கிறார்.

தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை.  தத்துவங்களை கடந்து இறை அருளைப்பெற்றதால், வெற்றி அடைந்ததால், வெற்றியின் சின்னமான வெள்ளை உடையை தேர்ந்தெடுத்தார் வள்ளலார் என்று அவரின் உபதேசம் மூலம் அறியமுடிகிறது.


லாங்கிளாத்:


    எளிமையின் இலக்கணமாக இருந்த வள்ளலாரிடம் இரண்டே இரண்டு வெள்ளை ஆடைகளும், ஒரு ஜோடி  செருப்பு மட்டுமே இருந்தன. சில சமயங்களில் ஒரே ஒரு ஆடை மட்டுமே அவரிடம் இருந்தது என்றும் கூறுகிறார்கள்.  துறவிகள் மரத்தால் ஆன பாதக்குறடு அணிவது வழக்கம்.  வள்ளலார்  செருப்பு(ஜோடு) அணிந்தார்.  இது ஆற்காடு செருப்பு.  

 மலிவு விலையில் கிடைத்த லாங்கிளாத் வகை துணியைத்தான் அவர் அணிந்துவந்தார்.  சென்னையை விட்டு கடலூர் மாவட்டத்திற்கு சென்று தங்கிவிட்ட பின்னர், சென்னையில் இருந்த தன் நண்பர் இறுக்கம் இரத்தின முதலியாருக்கு கடிதம் எழுதி, லாங்கிளாத் துணி வாங்கி அனுப்பும்படி கேட்டுள்ளார். அவரும் அத்துணியினை வாங்கி அனுப்பியுள்ளார்.  

இதனை, 
’அசலார் யாராவது இவ்விடம் வருகின்றவர்களிடத்தில் ஒன்று அல்லது இரண்டு லாங்கிளாத்து பீசு வாங்கி அனுப்பினால் அதன் கிரயத்தை பின்பு செலுத்திவிடலாம்.  இதற்கு பிரயாசம் வேண்டாம்’’
    
‘’வருத்தம் பாராது வரவிடுத்த ஒரு பீசும் ஒன்பது லட்சம் பீசுகளாக கொண்டேன்.  இதுவே அமையும்.  இனி வருத்தமெடுத்துக்கொள்ள வேண்டாம்.  பின்பு பார்த்துக்கொள்ளலாம். இதுவன்றி என் பொருட்டு வேறு வகைகளிலும் பிரயாச மெடுத்துக் கொள்ள வேண்டாம்’’
-என்று இறுக்கம் இரத்தின முதலியாருக்கு வள்ளலார் எழுதிய கடிதங்கள் வாயிலாக அறியமுடிகிறது. 

அந்த லாங்கிளாத் வெள்ளை துணியைத்தான் முழங்காலுக்கு கீழே இருக்கும்படி இடுப்பில் சுற்றிக்கொண்டு, அதையே உடல் முழுவதும் சுற்றிக்கொண்டு, முக்காடும் போட்டுக்கொண்டார் வள்ளலார். முதலில் இரண்டு வெள்ளை ஆடைகளை அணிந்து வந்த வள்ளலார், பின்னாளில் ஒரே ஒரு நீளமான வெள்ளை ஆடையின் ஒரு பாதியை இடுப்பில் சுற்றியும், மறு பாதியை உடம்பின் மேலே போர்த்திக்கொண்டும், அதையே தலைக்கு முக்காடிட்டுக்கொண்டார் என்பதை காணக்கிடைக்கும் வள்ளலாரின் சித்திரங்கள் மூலம் அறியமுடிகிறது.

பகிரவும்...