Main Menu

சுப நிகழ்ச்சிகளில் குத்துவிளக்கை பயன்படுத்த காரணம் தெரியுமா?

இந்து சமய வழிபாட்டிலும் குத்துவிளக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. குத்துவிளக்கை சுப காரியங்கள் நடக்கும் போதும், கோவில்களிலும், வீடுகளிலும் பயன்படுத்தி வருவதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

இந்து சமய வழிபாட்டிலும் குத்துவிளக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து வரும் ஒளியானது தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. குத்துவிளக்கின் அடிப்பாகம் பிரம்ம தேவரையும், நடுப்பாகம் மகாவிஷ்ணுவையும், மேல்பாகம் ஈஸ்வரனையும் குறிக்கிறது.

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். விளக்கில் ஊற்றப்படும் நெய்யானது நாதம் என்றும், திரியானது பிந்து என்றும், சுடர் விட்டு எரியும் சுடர் ஆனது உலக இயக்கங்களுக்கு அடிப்படையான சக்தியின் அம்சமான மலைமகளையும் அம்சமாக கொண்டுள்ளது என்று முன்னோர்கள் கூறுகின்றனர்.

இப்படி தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் பெறலாம். இந்த குத்து விளக்கை ஏற்றுவதினால் பஞ்ச பூத சக்தியை ஈர்த்து இறையருளை முழுமையாக நாம் பெற்று கொள்ள முடியும்.

அதனால் தான் சுப நிகழ்ச்சிகளின் போதும், வழிபாட்டின்போதும் குத்து விளக்கேற்றுவதை இன்றும் வழக்கத்தில் வைத்துள்ளனர் . பஞ்சபூத சக்தி அடிப்படையாக செயல்படுவதை குறிக்கும் வண்ணம் குத்து விளக்கிற்கு ஐந்து முகங்கள் இருக்கிறது.

இந்த விளக்கை ஏற்றும் பொழுது நிறைய ஆகம விதிகள் கடைபிடிக்க வேண்டும். அதாவது விளக்கினை சுத்தமாக கழுவி, மஞ்சள் குங்குமமிட்டு, பூவைத்து, பசுஞ்சாணம் அல்லது பச்சரிசியின் மீதே குத்துவிளக்கை எப்போதும் வைக்கவேண்டும்.

மேலும் திருவிளக்கு வழிபாட்டின் போது எவர் சில்வர் குத்துவிளக்கை பயன்படுத்தக் கூடாது. பித்தளை,வெண்கல விளக்குகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும். உடைந்த அல்லது கீறல் விழுந்த விளக்குகளையும் உபயோகப்படுத்தக் கூடாது.

குத்து விளக்கை ஏற்றும் பொழுது ஐந்து முகத்திலும் தீபம் ஏற்றுவது நல்ல பலனை தரும். இப்படி தீபம் ஏற்றும் போது நெய் அல்லது எண்ணெய் ஊற்றிய பிறகு தான் திரி போடவேண்டும்.

அதன் பின்பு தான் தீபமேற்றி வழிபட வேண்டும். இதுவே சரியான முறையாக சாஸ்திரமும் கூறுகிறது. திரி முதலில் போட்டு விட்டு நெய் விடுவது தவறான முறையாகும்.

பகிரவும்...