Main Menu

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்

வள்ளலார் தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார். அதில் சிலவற்றை இங்கே அறிந்துகொள்வோம்.

வள்ளலார்வள்ளலார் சிறப்பு மிக்க ஆன்மிகவாதிகளில் ஒருவர். இறைவன், ஜோதி வடிவில் இருப்பதாக தன் அருள்கொண்டு உணர்ந்தவர். அவர் வழி பின்பற்றும் பலரும் இன்றும், இறைவனை ஜோதி வடிவிலேயே வழிபாடு செய்து வருகிறார்கள். தான் வாழ்ந்த காலங்களில் பல அற்புதங்களை நிகழ்த்தி காட்டியவர் வள்ளலார். அதில் சிலவற்றை இங்கே அறிந்துகொள்வோம்.

வள்ளலாரின் தருமச்சாலைக்கு, வடலூரை சுற்றியிருக்கும் கிராமங்களில் இருந்து விவசாயம் செய்வோர் பலரும் அறுவடை நாட்களில் நெல்மணிகளை மூட்டைகளாக கொண்டுவந்து கொடுப்பார்கள். அதை அரிசியாக்கி, உணவுக்கு தயார் செய்வார்கள். தருமசாலையில் ஒருநாள் நெல்மணிகள் தீர்ந்துபோயின. மறுநாள் உணவுக்கு நெல் இல்லை. வள்ளலார் தனித்து அமர்ந்து தியானத்தில் இருந்தார். அவர் தியானத்தில் இருந்து கண்விழித்ததும், தருமசாலையில் இருந்த அன்பர், உணவுக்கான நெல் இல்லாதது பற்றி வள்ளலாருக்கு கூறினார். ஆனால் வள்ளலார் அது பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. இது தருமசாலையை நிர்வகித்த அன்பருக்கு ஆச்சரியமாக இருந்தது.

அதைக் கவனித்த வள்ளலார், “கவலைப் படாதீர்கள். நாளை வரவேண்டியவை வரும்” என்று திருவாய் மலர்ந்தார். வள்ளலார் அற்புதங்கள் செய்யக் கூடியவர். அதனால் அவர் சொன்னபடி நாளை நெல் வந்து சேர்ந்துவிடும். என்றாலும் நாளைய உணவுக்கு நெல்லை உடனடியாக எப்படி அரிசியாக்கி உணவு தயார் செய்ய முடியும் என்ற எண்ணம் அந்த நிர்வாகியை துளைத்தெடுத்தது. மறுநாள் விடியலுக்காக நிர்வாகி காத்திருந்தார். வள்ளலார் சொன்னது போலவே மறுநாள் அதிகாலை நேரத்தில், திருத்துறையூரில் இருந்து ஒரு பண்ணையார் மூன்று மாட்டு வண்டிகளில் தருமசாலைக்கு தேவையான பொருள்களை கொண்டு வந்திருந்தார். அதில் நெல்மணிகளுக்கு பதிலாக அரிசியாகவே அவர் கொண்டு வந்திருந்ததைக் கண்டு நிர்வாகி ஆச்சரியம் அடைந்தார். அரிசியோடு இன்னும் சில தானியங்களும், காய்கறிகளும் கூட வந்திருந்தது. அவற்றை கொண்டு வந்த பண்ணையார் “நேற்று இரவு என் கனவில் வந்து, இந்த உத்தரவைப் பிறப்பித்தார் பெருமான். அதனால் உடனே எடுத்து வந்தேன்” என்று கூறினார்.

மழையும்.. செழித்து வளர்ந்த பயிரும்..

வள்ளலார் வடலூரில் வாழ்ந்த நாட்களில், பல்வேறு அன்பர்கள் வள்ளலாரை தரிசிக்கவும் அவரது பிரசங்கத்தைக் கேட்கவும் கூடுவார்கள். நாட்கள் செல்லச் செல்ல, வள்ளலாரின் பெருமை நாடு முழுவதும் பரவியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தினமும் வடலூர் நோக்கி படையெடுக்கத் தொடங்கினர். பலரும் வள்ளலாரின் திருமுகத்தை தரிசிக்கும் ஆவலில் அவரை சந்தித்து அருளாசிப் பெற்று வந்தனர். இதனால் ஓய்வின்றி தினமும் சுழன்றதில் வள்ளலார் உடல்நலம் சற்று பாதிக்கப்பட்டது. இதனால் கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பிய வள்ளலார், மேட்டுக்குப்பம் என்ற சிறிய கிராமத்திற்கு தம் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டார். அப்படி அவர் தங்கியிருந்த நேரத்தில், சிலர் அவரைப் பார்ப்பதற்காக பல நாட்களாக வந்து போயினர். ஒரு வழியாக மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் இருப்பதை அறிந்த அவர்கள் அங்கு வந்து வள்ளலாரை சந்தித்தனர். கோடைப்பருவமான சித்திரை மாதம் அது. இந்த நேரத்தில் மழையின்றி ஊர் வாடுவதையும், ஏரி, குளம், கிணறுகளில் நீர் வற்றியுள்ள நிலையையும் சொல்லி வருந்தினர். உடனே வள்ளலார் ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு வந்து தமது பாதங்களில் ஊற்றும்படி கூறினார். அன்பர்கள் அவ்வாறே செய்ததும், அன்றைக்கே நல்ல மழை பெய்தது. பயிர்களும் செழித்து வளர்ந்தது.

அட்சயபாத்திரமாக மாறிய உணவு

‘வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று, பயிர்களுக்கு தேவையான நீர் பசியையே பொறுத்துக் கொள்ள முடியாதவராக இருந்தவர் வள்ளலார். அவரால் மனிதர்களின் பசியை நிச்சயமாக பொறுத்துக் கொண்டிருக்கவே முடியாது. அதன் காரணமாகத்தான் வடலூர் தருமசாலை ஒன்றை நிறுவி, பசித்த நிலையில் வாடும் அன்பர்களுக்கு எல்லாம் உணவு வழங்கும் வசதியை தொடங்கிவைத்தார். வள்ளலாரின் வழியில் நின்றவர்களும், அவர் மீது பெரும் மரியாதை வைத்திருந்த செல்வந்தவர்களும், தங்களால் இயன்ற உதவியை அரிசியாகவோ, மற்ற தானியங்களாகவோ தருமசாலைக்கு வழங்கி வந்தனர். அதனால் தான் அந்த தருமசாலையில் உள்ள உணவு சமைக்கும் அடுப்பானது, ‘அணையா அடுப்பு’ என்ற பெயரை இன்றளவும் பெற்று திகழ்கிறது.

வள்ளலார் வாழ்ந்த நாட்களில், தருமசாலை தொடங்கப்பட்ட சில நாட்களில் ஒரு நாள் இரவு உணவு போடுவதற்கான நேரம் நெருங்கியிருந்தது. இரவு உணவிற்கான சோறு வடிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்தது. கொஞ்சம் பேர் சாப்பிடக்கூடிய அளவில்தான் சோறு வடிக்கப்பட்டு இருந்தது. வேறு அரிசியும் கையிருப்பு இல்லாத நிலையில், தருமசாலைக்கு நிறைய அன்பர்கள் வந்து சாப்பிட அமர்ந்துவிட்டார்கள்.

அந்த நேரத்தில் தருமசாலையின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டிருந்த அன்பர், வள்ளலார் பெருமானிடம் வந்து நிலைமையை சொல்லி வருந்தினார். ஆனால் வள்ளலார் எந்த சலனத்தையும் முகத்தில் காட்டவில்லை. அதோடு “நீங்கள் சென்று இலை போடுங்கள்” என்று கூறி அனுப்பிவிட்டு, சிறிது நேரத்திலேயே உணவு பரிமாறும் இடத்திற்கு வந்து சேர்ந்தார், வள்ளலார். சோறு இருந்த பாத்திரத்தை எடுத்து, தமது திருக்கரங்களால் அனைவருக்கும் பரிமாறத் தொடங்கினார். எடுக்க எடுக்க சோறு குறையாமல் பாத்திரத்தில் இருந்து வந்துகொண்டே இருந்தது. அதைப் பார்த்து தருமசாலையில் உணவு தயாரித்த அன்பர்கள், அதன் நிர்வாகி உள்ளிட்ட அனைவரும் வாயடைத்து நின்று விட்டனர். சாப்பிட வந்திருந்த அன்பர்கள் அனைவருக்கும் வயிறாற வள்ளலாரின் கரங்களால் சோறு வழங்கப்பட்டது. வள்ளலார் தன் வாழ்வில் நடத்திய மிகப்பெரிய அற்புதமாகவே, அவரது அன்பர்கள் அனைவரும் கருதுகிறார்கள்.

மனம் மாறிய திருடர்கள்

கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் பணியாற்றிய அன்பர் ஒருவர், வள்ளலாரை தன்னுடைய ஊருக்கு அழைத்துக்கொண்டு போக எண்ணினார். இருவரும் மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்றனர். வண்டியில் அன்பரின் உதவியாளர் ஒருவர், வண்டியோட்டி ஒருவரும் உடன் இருந்தனர். வண்டி இரவு நேரத்தில் குள்ளஞ்சாவடி அருகே வந்தபோது, திருடர்கள் இருவர் வண்டியை வழி மறித்தனர். வண்டியில் இருந்தவர்களை இறங்குமாறு மிரட்டினர். பயந்துபோன வண்டியோட்டியும், அன்பரின் உதவியாளரும் அருகில் இருந்த முந்திரி தோப்பிற்குள் ஓடி ஒளிந்தனர். ‘வள்ளலாருக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே’ என்று எண்ணிய அன்பர், வண்டியை விட்டு கீழே இறங்கினார். அவருடைய கையில் இருந்த வைர மோதிரத்தை கழற்றித் தரும்படி திருடர்கள் மிரட்டினர். அதுவரை அமைதியாய் இருந்த வள்ளலார், ‘கொடுக்க வேண்டாம்’ என்று அன்பரை தடுத்தார். உடனே திருடர்கள் கையில் வைத்திருந்த தடியால் வள்ளலாரை தாங்க முயன்றனர். வள்ளலார் திருடர்களை உற்றுப்பார்க்க, அவர்களது ஓங்கிய கைகள் செயலற்றுப் போய் அப்படியே நின்றுவிட்டன. கையை அசைக்கமுடியாமல் தவித்தனர். உடனே தங்கள் செயலுக்கு வருந்தி வள்ளலாரிடம் மன்னிப்பும் கேட்டனர். இதனால் மனமிரங்கிய வள்ளலார், திருடர்களின் கைகளை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். வள்ளலாரை வணங்கிய திருடர்கள் இருவரும், இனிமேல் உழைத்து உண்பதாக வாக்குறுதி அளித்து விட்டுச் சென்றனர்.

பகிரவும்...