Main Menu

இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்

உலக பத்திரிகை சுதந்திர நாள் (World Press Freedom Day) என்பது பத்திரிகை சுதந்திரத்தைப் பரப்பும் நோக்கிலும் “மனித உரிமைகள் சாசனம்” பகுதி 19 இல் இடம்பெற்றுள்ள பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும் ஐக்கிய நாடுகள் அவையினால் சிறப்பு நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

1993 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி ஒவ்வோர் ஆண்டும் மே 3 ஆம் நாளன்று பத்திரிகை சுதந்திர நாளாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆப்பிரிக்கப் பத்திரிகைகளால் கூட்டாக 1991 ஆம் ஆண்டு இந்நாளிலேயே “பத்திரிகை சுதந்திர சாசனம்” (Declaration of Windhoek) முன்வைக்கப்பட்டது. இது 1991 ஆம் ஆண்டு யுனெஸ்கோ (UNESCO) அமைப்பினால் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தின் 26 ஆம் அமர்வில் சிபாரிசு செய்யப்பட்ட ,’உலகின் சகல பிராந்தியங்களிற்குமான பேச்சு மற்றும் கருத்து வெளியீட்டுச் சுதந்திரத்திற்கானதும், ஊடகச் சுதந்திரத்தினதும் பாதுகாப்பிற்கும் மேம்படுத்தலிற்குமான ஆணை’ என்ற தொனிப் பொருளில் பரிந்துரைக்கப்பட்ட கட்டளையின் நிமித்தமாக உருவானது.

இந்நாள் அன்று, உலக அமைதிக்காகவும், பேச்சுச் சுதந்திரத்திற்காகவும் மற்றும் பத்திரிக்கை தர்மத்தினூடாகவும் பல இன்னல்களைத் தாண்டிப் போராடிய பத்திரிகை எழுத்தாளர் ஒருவருக்கு 25,000 டாலர் பெறுமதியான பரிசு வழங்கப்படுகின்றது. சுமார் 14 நபர்களைக் கொண்ட குழுவால் குறிப்பிட்ட இத்தேர்வு நடைபெறுகிறது. இந்த ஆண்டு எகிப்தியன் போட்டோகிராபர் மக்மவுத் அபு செயித்திற்கு அளிக்கப்பட உள்ளது. இவர் கடந்த 2013-ம் ஆண்டு எகிப்தில் நடைபெற்ற போரட்டத்தின் போது போட்டோ எடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருதுபொருளை மையமாக கொண்டு கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் தன்னிச்சையாக் செயல்படுவதை நோக்கமாக கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதே போல் இந்நாளன்று நாட்டிற்காக உயிர்நீத்த பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதை செலுத்தப்படும்.

உலகில் நடக்கும் நிகழ்வுகளை, அதன் உண்மை நிலையில் இருந்து தவறாமல், யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்கு வழங்குவதே பத்திரிகை. இவை சுதந்திரமாக செயல்பட்டால் தான், உண்மை நீடிக்கும்.

உலகில் எத்தனையோ பத்திரிகைகள் உள்ளன. அதன் பெயர் மற்றும் மொழிகளில் மட்டுமே வேறுபாடு இருக்கிறதே தவிர அதன் செயல்பாட்டில் அல்ல. பத்திரிகையாளர்களின் சமூக சேவை பாராட்டுக்குரியது.

ஜனநாயகத்தின் 4 பிரதான தூண்கள் என்று சொல்லப்படுபவற்றில் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை, ஊடகங்கள் என 4வது இடத்தில் ஊடகங்கள் வருகின்ற போதிலும், அதற்கு மேலுள்ள 3 தூண்களும் சரியாகச் செயற்படுகின்றனவா என்பதைக் கண்காணித்து, மக்களுக்கு அறிவிக்கும் முக்கியமான பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு.

இந்த ஊடகங்களால் கட்டியெழுப்பப்படும் ஆரோக்கியமான சூழலிலேயே ஆரோக்கியமான ஜனநாயகத்தையும் ஆரோக்கியமான சமூகங்களையும் கட்டியெழுப்ப முடியும். ஆனால் இன்றைய காலகட்டத்தில், “உலகத்திலும் சரி, இலங்கையிலும் சரி, ஆரோக்கியமான ஊடகச் சூழல் நிலவுகிறதா” என்ற கேள்வி முக்கியமாக எழுப்பப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.

ஊடகங்கள் என்று வரும் போது வழக்கமான பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள் போன்ற பெருந்திரள் ஊடங்களைத் தாண்டி இணையத்தில் காணப்படும் செய்தித் தளங்களும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களும் கூட ஊடகங்கள் என்ற வகைக்குள்ளேயே அடங்குகின்றன.

இதனாலேயே கண்டி அசம்பாவிதத்தினைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் இலங்கையில் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பினால் வெளியிடப்பட்ட ஊடகச் சுதந்திரச் சுட்டி இது பற்றிய கலந்துரையாடலுக்கு முக்கியமானது. ஐக்கிய அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதிலும் ஊடகச் சுதந்திரமென்பது ஆபத்துக்கு உள்ளாகியுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்திரிகைச் சுதந்திரம் உள்ள உலக நாடுகளின் தரப்படுத்தல் வரிசையில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இலங்கைக்கு 131 ஆம் இடம் கிடைக்கப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு இடம்பெற்ற கணிப்பீட்டில் இலங்கைக்கு 141 ஆம் இடம் கிடைக்கப் பெற்றிருந்தது.

உலக ஊடக சுதந்திர சுட்டி அறிக்கையின்படி, ஊடக சுதந்திரம் உச்ச அளவில் உள்ள நாடாக நோர்வே தெரிவாகியுள்ளது. இஸ்ரேல் 88 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவுக்கு 138 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. கடைசி இடமான 180 ஆவது இடத்துக்கு வட கொரியா தெரிவாகியுள்ளது.

2017 ஆம் ஆண்டில் வெளியாகிய கருத்துக் கணிப்பிலும் நோர்வேயே முதலாவது இடத்தில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேற்கத்தேய நாடுகள், தங்களை முன்னிலைப்படுத்துவதற்கான தகவலே இதுவென, இலகுவாகக் கூறி விட்டுக் கடந்து போக முடியும். இலங்கையை விட உக்ரேன், ஆப்கானிஸ்தான், நேபாளம், பிரேஸில், மத்திய ஆபிரிக்கக் குடியரசு, மாலி, மாலைதீவுகள், பிலிப்பைன்ஸ், சிம்பாப்வே, கமரூன், மியான்மார், வெனிசுவேலா போன்ற உள்நாட்டுப் போர் அல்லது உள்நாட்டுக் குழப்பங்கள் நிலவும் நாடுகள், சிறப்பான ஊடகச் சுதந்திரத்தைக் கொண்டுள்ளன என்பது இங்குள்ள நிலைமையை இலகுவாக வெளிக்காட்டுகிறது.

ஊடகங்களுக்கு ஓரளவு சுதந்திரத்தை வழங்கக் கூடியது எனக் கருதப்படும் இன்றைய அரசாங்கம் பதவிக்க வருவதற்கு முன்பாக இலங்கையில் நிலைமை 165வது இடத்தில் காணப்பட்டது. எனவே, இந்த முன்னேற்றமென்பது முக்கியமானது என்ற போதிலும் 2015ஆம் ஆண்டிலிருந்து 2016ஆம் ஆண்டில் 24 இடங்கள் முன்னேறிய இலங்கை, 2016இலிருந்து 2017இற்கு எந்தவித முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தவில்லை.எனினும் 2018இல் சற்று முன்னேற்றம் உள்ளது

உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடான கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள் உண்மை நிலையை உருமாற்றஞ் செய்யக் கூடிய சக்தி கொண்டவையாக விளங்குகின்றன.

1991 ஆம்ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யுனெஸ்கோ) பொதுமகாநாட்டின் 26 வது கூட்டத்தொடரில் செய்யப்பட்டவிதப்புரையைத் தொடர்ந்து வருடந்தோறும் மே 3 ஆம் திகதியை உலக பத்திரிகைச் சுதந்திர தினமாகஅனுஷ்டிக்கக் கோரும் பிரகடனத்தை 1993 டிசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நிறைவேற்றியது.

1991 ஆம் ஆண்டு ஏப்ரில் 29_மே 3 வரை நமீபியாவின் வின்டோக் நகரில் ‘சுதந்திரமானதும் பன்முகத்தன்மை கொண்டதுமான ஆபிரிக்கப் பத்திரிகைஉலகை மேம்படுத்தல்_27’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில்ஆபிரிக்கப் பத்திரிகையாளர்களினால் முன்வைக்கப்பட்ட சுதந்திரப் பத்திரிகைக் கோட்பாட்டுப் பிரகடனத்தின் வருடாந்த தினமாகவும் மே 3 ஆம்திகதி அமைந்திருக்கிறது.

இந்தப் பிரகடனம் பின்னர் யுனெஸ்கோ பொதுமகாநாட்டினால் அங்கீகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேசங்கள் மத்தியில் செம்மையானதும் சமநிலையானதுமான செய்திகளின் சுதந்திரமான பரிமாற்றத்தையும் உலகின் சகல பாகங்களிலும்இருந்து வருகின்ற தகவல்களின் சரியான தன்மையையும் நேர்மையையும்அறிந்து கொள்வதற்கான மக்களின் உரிமையையும் மேம்படுத்துவதே இத்தொனிப்பொருளின் நோக்கமாகும்.

சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்துவதற்கும் சுதந்திரமாகப் பத்திரிகைகளை வெளியிடுவதற்கும் செய்திகளைச் சதந்திரமாகஅடைவதற்கும் உலகிற்கு வாய்க்கப் பெற்ற ஒரு உரிமையைப் பாதுகாப்பதற்காகத் தங்களது உயிர்களைத் தியாகஞ் செய்தவர்களையும் சிறையில் அடைக்கப்பட்டுக் கொடுமைக்குள்ளாக்கப்படுபவர்களையும் நினைவு கூருவதற்கான சிறந்த ஒரு தருணமாகவும் இன்றைய தினம்அமைகிறது.

அரசாங்கம் உகந்தமுறையில் செயற்படுவதற்குச் சுதந்திரமானதும் நெறிமுறை வழுவாததுமான பத்திரிகைகள் அத்தியாவசியமானவையாகும். மக்களுக்கு அறிவூட்டுவதில் பத்திரிகைகளின் பங்கு அலட்சியம் செய்யப்பட முடியாததாகும். தற்போதைய நிலைவரங்களையும் நிகழ்வுப் போக்குகளையும் மக்களுக்கு அறியத் தந்து கொண்டிருப்பதில் பத்திரிகைகள் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரத்தை வகிக்கின்றன.

பத்திரிகைச் சுதந்திரம் என்பது அதற்கான வரையறைகளையும் கொண்ட ஒருஅடிப்படை உரிமையாகும். பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் உண்மைகளை மாத்திரமே பரப்ப வேண்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சுதந்திரமானதும் வெளிப்படையானதுமான பத்திரிகைத் துறையின் பெயரில் துணிச்சலுடன் செயற்பட்டுத் தங்களை அர்ப்பணம் செய்தவர்களின் வரலாற்றின் மூலமாக எம்மால் தெளிவாக உணரக் கூடியது ஒரேயொரு உண்மையேயாகும்.

ஒடுக்குமுறையாளர்கள் முதலில் ஒழித்துக் கட்டுவது உண்மையைக் கூறுகின்ற பத்திரிகைகளையேயாகும். பத்திரிகைச் சுதந்திரமும் கருத்துவெளிப்பாட்டுச் சுதந்திரமும் உண்மையான ஜனநாயக சமுதாயங்களில் வாழ்கின்ற ஊடகவியலாளர் களுக்கு இன்னமும் ஒரு கனவாகவே இருக்கின்றதென்பது கவலைக்குரிய விடயமாகும்.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் உக்கிரம் பெற்றிருந்த காலப்பகுதியிலும் அதனைத் தொடர்ந்துவந்த காலப்பகுதியிலும் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு உட்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இதுவரை நீதிகிடைக்கவில்லை. லசந்த விக்கிரமதுங்க மற்றும் கீத் நொயார் விடயங்களில் வழக்குகள் நடைபெற்றுவருகின்றபோதும் இழுத்தடிப்புக்களையே காணமுடிகின்றது.

ஜனநாயகத்தை நிலைநாட்டிவிட்டதாக பறைசாற்றும் நல்லாட்சி அரசாங்கம் ஊடகவியலாளர்கள் படுகொலைதொடர்பாக ஒரு வழக்கைத்தானும் நிறைவுசெய்யவில்லை என்பது உண்மையான நோக்கம் தொடர்பாக கேள்விகளை எழுப்புகின்றது. உலகளவிலும் இன்று ஊடகவியலாளர்கள் பேராபத்தை எதிர்நோக்கியுள்ளதற்கு கடந்தவாரம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற சம்பவங்கள் சிறந்த உதாரணமாகும். தமது உயிரைவிடவும் சமூகத்தின் நலனை, மனித குல மேம்பாட்டினை பெரிதாகக் கொள்ளும் ஊடகவியலாளர்களே இந்த பூமி உயிரோட்டமுள்ளதாக திகழ்வதற்கு முக்கியகாரணமெனில் மிகையல்ல.

நன்றி ஆதவன்

பகிரவும்...