Main Menu

மாஸ்கோ தாக்குதலுக்கு உக்ரைன் மூளையாக செயல் பட்டிருக்கலாம்.. புதின் சந்தேகம்!

கடந்த 22ம் தேதி இரவு ரஷ்யாவில் இசை கச்சேரி நடந்த அரங்கில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதில் 137 பேர் கொல்லப்பட்ட நிலையில் இதன் பின்னணியில் உக்ரைன் இருக்கலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் சந்தேகம் தெரிவித்துள்ளார். கடந்த 22ம் தேதி இரவில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ‘பிக்னிக்’ எனும் ராக் இசைக்குழுவினர் கச்சேரியை நடத்தியிருந்தனர். இந்த கச்சேரியில் அடையாளம் தெரியாத 3-5 நபர்கள் கொண்ட குழு உள்ளே புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் 137 பேர் கொல்லப்பட்டதுடன் 182 பேர் படுகாயமடைந்தனர். இதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கிகளுடன் வெடிபொருட்களையும் பயன்படுத்தியதால், கச்சேரி நடந்த கட்டிடம் தீ பற்றி எரிந்தது.

இந்த சம்பவம் குறித்து மாஸ்கோ மேயர் சோபியான் கூறுகையில், “குரோகஸ் சிட்டி மையத்தில் பயங்கரமான சம்பவம் நடந்திருக்கிறது. இதில் உயிரிழந்தவர்களுக்கு எனது அஞ்சலியையும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா, இந்த சம்பவத்தை கொடூரமான குற்றம் என்று விமர்சித்துள்ளார். உலக நாடுகள் இந்த சம்பவத்தை கண்டிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார். தற்போது உக்ரைனுடன்-ரஷ்யா போரில் ஈடுபட்டு வருகிறது. எனவே, உக்ரைன் கிளர்ச்சி படைகள் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று ரஷ்ய தரப்பு குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்கா இந்த தாக்குதலை கண்டித்திருந்தாலும், உக்ரைன் தொடர்பு எதுவும் இதில் இல்லை என்று கூறியுள்ளது. தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி இதனை விளக்கியுள்ளார். அதாவது “மாஸ்கோவில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உக்ரைனியர்கள் யாரும் ஈடுபட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை” என்று விளக்கமளித்துள்ளார்.

இப்படியாக தாக்குதலை யார் நடத்தியிருப்பார்கள் என்று விவாதங்கள் எழுந்திருந்த நிலையில், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்றும், தாக்குதல் நடத்தியவர்கள் பத்திரமாக தங்கள் இடங்களுக்கு திரும்பிவிட்டனர் எனவும் கூறியிருந்தனர். இதனையடுத்து இவர்களை ரஷ்ய காவல்துறை, உளவுத்துறை ஆகியவை தேடி வந்தது. இந்நிலையில் நேற்று இந்த தாக்குதல் தொடர்பாக 4 பேரை கைது செய்திருக்கிறது.

4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவில் இதுபோன்ற தாக்குதல்கள் நடந்தது கிடையாது. சமீபத்தில் நடந்த தேர்தலில் புதின் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்திருப்பது உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இந்த சம்பவம் இஸ்லாமிய போராளிகளால் நடத்தப்பட்டிருக்கிறது என்பதை ரஷ்ய அதிபர் புதின் ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆனால், இந்த தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாகவும், இதன் மூலம் உக்ரைன் திருப்தியடைந்திருக்கலாம் என்றும் அவர் சந்தேகம் தெரிவித்திருக்கிறார். எனவே, இனி வரும் நாட்களில் உக்ரைன் மீதான தாக்குதல் உக்கிரமாக வாய்ப்பிருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

பகிரவும்...