Main Menu

இடம்பெயர்ந்த மக்களின் அவல வாழ்க்கை!

கடந்த 28.09.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று வவுனியா ஈஸ்வரிபுரத்தில் வயோதிப பெண்
ஒருவர், உணவின்றி பட்டினியால் மரணித்துள்ள சம்பவம் ஆழ்ந்த கவலையை எல்லோர்
மனங்களிலும் ஏற்படுத்தியுள்ளது.
*அந்த துயரச்சசம்பவத்தின் பின்னணி பற்றிய பதிவு! *மரணமடைந்த ஆறுமுகம் லட்சுமி (80 வயது) என்பவர், தனது மகளான கிருஸ்ணவேல்
சாந்தியின் பராமரிப்பில் ஈஸ்வரிபுரத்தில் வசித்து வந்துள்ளார்.
சாந்தியின் கணவர் கிருஸ்ணவேல் நோய்வாய்ப்பட்டு கடந்த இருபது நாட்களாக வவுனியா
பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கணவரை நாளாந்தம்
ஈஸ்வரிபுரத்திலிருந்து வந்து பார்வையிட்டுச்செல்வதற்கு சாந்தியிடம்
போக்குவரத்து செலவுகளுக்கு பணம் இல்லாததால், திருமணமாகி பூந்தோட்டம் அகதிகள்
முகாமில் வசிக்கும் தனது மூத்த மகளின் வீட்டில் தங்கியிருந்து நாளாந்தம்
கால்நடையாக வவுனியா வைத்தியசாலைக்கு சென்று தனது கணவரை பார்வையிட்டு
வந்துள்ளார் சாந்தி.ஈஸ்வரிபுரத்தில் தனது தாயின் (மரணமடைந்த லட்சுமி) பராமரிப்பில் தனது மூன்று
சிறுமிகளையும் விட்டுவிட்டே, பூந்தோட்டம் அகதிகள் முகாமில் திருமணமான தனது
மூத்த மகளுடன் போக்குவரத்து வசதிக்காக தற்காலிகமாக தங்கியிருந்து தனது கணவரை
பார்வையிட்டு வந்துள்ளார் சாந்தி.இந்தநிலையில் ஈஸ்வரிபுரத்தில் மூன்று சிறுமிகளுக்கும், வயதான லட்சுமிக்கும்
உணவு முறையாக கிடைக்காததால் லட்சுமிக்கு மரணம் சம்பவித்துள்ளது.வயதான லட்சுமி அக்கிராமத்திலுள்ள கடை ஒன்றில், தனது மகளும் மருமகனும் சுகமாகி
வந்த பின்னர் காசு தருவதாக கூறி கடனுக்கு சமையல் சாமான்கள் கேட்டுள்ளார்.
அவர்கள் கடன் கொடுக்க மறுத்தபடியால், தனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில்
சாப்பிட உணவு தருமாறு கேட்டுள்ளார். அவர்களும் இப்போது தான் உலை வைத்துள்ளோம்.
கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளுங்கள் சமைத்து முடிந்ததும் சாப்பாடு தருகிறோம்
என்று கூறியுள்ளனர். அவ்வேளையில் அவர்களிடம் குடிக்க தண்ணீர் தருமாறு கோரிய
லட்சுமி, தண்ணீரை குடித்து விட்டு களைப்பாறும் சமயம் அவரது உயிர்
பிரிந்துள்ளது.முதுமை மற்றும் மூன்று நாட்களாக சாப்பிடவில்லை என்பதாலேயே லட்சுமிக்கு மரணம்
சம்பவித்திருக்கலாம்.

லட்சுமியின் மகள் கிருஸ்ணவேல் சாந்தி தற்சமயம் பூந்தோட்டம் நலன்புரி
நிலையத்தில் தனது மூத்த மகளுடன் தங்கியிருந்து, நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக
வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது கணவரை கால்நடையாகவே சென்று
பார்வையிட்டு வருகின்றார்.

மிகுந்த பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டு, வறுமை பசி பட்டினி நிலைக்கு
ஆளாகியுள்ள சாந்தியின் குடும்பம் மீதமுள்ள தமது ஆறு பிள்ளைகளின் கல்வி,
எதிர்காலம் பற்றி பாரிய அச்சமும் கவலையும் கொண்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டுள்ள கணவரை பராமரிப்பதா? பிள்ளைகளின் கல்வியை கவனிப்பதா? எனும்
இக்கட்டான நிலையில், தனது ஆறு பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக கருணை உள்ளம்
கொண்டவர்களின் உதவியை நாடி நிற்கின்றார். பூந்தோட்டம் அகதிகள் முகாமில்
உள்ளவர்களினதும், வெளியிடங்களில் வசிக்கும் பல குடும்பங்களினதும் பொருளாதார
நிலைமைகள் இவ்வாறே காணப்படுகின்றன.

பூந்தோட்டம் அகதிகள் முகாமில் இருப்பவர்கள் கடந்த 17 வருடங்களாக சொந்தக்காணி
அற்றவர்களாகவும், மீளக்குடியேற்றம் செய்யப்படாமலும் எவ்வித அடிப்படை வசதிகளும்
அற்ற  நிலையில் குடிநீர், மலசலகூடம், மின்சார வசதிகள் இல்லாமலும், பழுதடைந்து
சேதமடைந்த கூரை குடிசைகளுடன் நுளம்புத்தொல்லைகளுக்கு மத்தியில் குழந்தைகள்
முதல் முதியவர் வரை மனிதர்கள் சீவிக்க முடியாத சூழலில்
அவஸ்தைபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

தற்சமயம் அரச அதிகாரிகள் நெடுங்கேணி பிரதேசத்தில் இராசபுரம் கிராமத்தில்,
பூந்தோட்டம் முகாமில் வசிப்பவர்களை மீளக்குடியேற்றம் செய்வதற்கான
முன்முயற்சிகளை எடுத்துள்ளனர். ஆனால் இந்த திட்டம் முழுமையடைய எவ்வளவு காலம்
எடுக்கும் என்பது அவர்களுக்கே புரியாத புதிராக இருக்கின்றது.

தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் மிகுந்த சிரமங்களை மக்கள்
எதிர்கொண்டுள்ளனர். மீளக்குடியேற்றம் செய்வதற்கு முன்னர் தற்போது அவர்கள்
நிகழ்காலத்தில் சீவிக்கக்கூடியவாறு குடிநீர், மலசலகூடம், மின்சார வசதிகளை
செய்து தருமாறு அதிகாரிகளிடம் இந்த மக்கள் பலதடவைகள் கேட்டும்
நிறைவேற்றப்டவில்லை. இந்த வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தால் இந்த மக்கள்
தொடர்ந்தும் இப்பகுதியில் நிரந்தரமாக தங்கிவிட முயல்வார்கள் என்பது
அதிகாரிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. அதனாலேயே அனைத்து அடிப்படை வசதிகளும்
நன்கு திட்டமிட்டு துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்த மக்களை முகாமை விட்டு வெளியேற்ற வேண்டும் என்பதில் குறியாக இருக்கும்
அதிகாரிகள் 17 வருடங்கள் கடந்தும் இந்த மக்களை மீளக்குடியேற்றம் செய்யாமல்
அலட்சியப்போக்கோடு இருக்கின்றனர். தற்சமயம் பூந்தோட்டம் முகாமில்
வாழ்பவர்களையும் மனிதர்களாக நினைத்து மனிதநேயத்துடனாவது அடிப்படை தேவைகளை
ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இருப்பது அடிப்படை மனித
உரிமை மீறலாகும்.

இந்த நிலையில் இன்று (01.10.2014) பூந்தோட்டம் முகாமுக்கு சென்று அங்குள்ள
மக்களுடனும், பட்டினியால் சாவடைந்த லட்சுமியின் மகள் கிருஸ்ணவேல் சாந்தியின்
குடும்பத்துடனும் நிலைமைகளை கேட்டறிந்துள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர் வைத்தியகலாநிதி
சி.சிவமோகன் ஆகியோர் கனடா தமிழ் சீ.என்.என் இணையதளத்தின் அனுசரணையுடன்
150 கிலோ அரிசி பைகளையும், பிரான்ஸ் ரீ.ஆர்.ரீ தமிழ்ஒலி வானொலியின் மூலமாக பண
உதவியையும் கிருஸ்ணவேல் சாந்தியின் குடும்பத்துக்கு வழங்கியுள்ளனர்.

நல்லுள்ளம் கொண்டவர்களிடம் இருந்து தனது ஆறு பிள்ளைகளின் கல்விக்கான உதவியை
கிருஸ்ணவேல் சாந்தியின் குடும்பத்தினர் எதிர்பார்க்கின்றனர்.
*தொடர்புகளுக்கு:   0094 77 6958 902

2

3

4

61

7

8

1

9

10

111

0

பகிரவும்...