பிரான்ஸ்: சம்பள முன்பணம் கோரும் ஊழியர்களின் எண்ணிக்கை உயர்வு
எதிர்பாராத செலவுகள், மருத்துவச் செலவுகள், கார் பழுது, மின்சாரக் கட்டணம் போன்றவற்றைச் சமாளிக்க அதிகமான ஊழியர்கள் தங்களுடைய முதலாளியிடம் சம்பள முன்பணம் (Acompte sur salaire) கோரி வருகின்றனர். Rosaly நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, ஒரே ஆண்டில் இத்தகைய கோரிக்கைகள் 30% அதிகரித்துள்ளன. இது ஊழியர்களின் அன்றாடப் பொருளாதாரச் சிரமங்களை வெளிப்படுத்துகிறது.
பிரான்ஸ் தொழிலாளர் சட்டத்தின் L3242-1 பிரிவின்படி, CDI அல்லது CDD ஒப்பந்தத்தில் பணிபுரியும் முழுநேர மற்றும் பகுதிநேர ஊழியர்கள் ஏற்கெனவே செய்த வேலைக்கான சம்பளத்தின் ஒரு பகுதியை முன்கூட்டியே பெற உரிமை பெற்றுள்ளனர். பொதுவாக மாதத்தின் 15 நாட்கள் வேலை முடிந்த பிறகு, மாதாந்த நிகரச் சம்பளத்தில் 50% வரை முன்பணமாகக் கோரலாம். சட்ட நிபந்தனைகள் பூர்த்தியானால் முதலாளி மறுக்க முடியாது. மேலும், முன்பணம் கேட்பதற்கான காரணத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
ஆனால், சம்பள முன்பணம் (Acompte) மற்றும் சம்பள முன்கூட்டிய கடன் (Avance sur salaire) இரண்டும் வெவ்வேறானவை. ஏற்கெனவே வேலை செய்ததற்கான சம்பளத்தை முன்கூட்டியே பெறுவது சம்பள முன்பணம் (Acompte). இன்னும் வேலை செய்யாத காலத்திற்கான சம்பளத்தை முன்கூட்டியே கேட்பது சம்பளக் கடனாகும் (Avance sur salaire). இதனை வழங்குவதா வேண்டாமா என்பதை முதலாளியே தீர்மானிக்கலாம். வழங்கப்பட்டால், பொதுவாக மாதாந்திர நிகரச் சம்பளத்தில் 10%த்தை மீறாமல் பிடித்தம் செய்து திருப்பிச் செலுத்த வேண்டும்.
தற்போது Rosaly, Spayr, Stairwage போன்ற டிஜிட்டல் சேவைகள் மூலம் சம்பள முன்பணம் பெறுவது எளிதாகியுள்ளது. Rosaly ஆய்வின்படி, அதன் மூலம் வழங்கப்படும் முன்பணங்களில் 74% தொகை 100 யூரோக்கள் அல்லது அதற்கும் குறைவானதாகும். ஊழியர்கள் மாதத்திற்கு சராசரியாக ஐந்து முறை இத்தகைய முன்பணத்தைக் கோருகின்றனர். இதனால் வங்கிக் கணக்கில் ஓவர் டிராஃப்ட் பயன்படுத்துவதையும், அதற்கான வட்டி மற்றும் கூடுதல் கட்டணங்களையும் தவிர்த்து, அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடிகிறது.
