Main Menu

பிரான்ஸில் ஈரான் சைபர் தாக்குதல் – பிரான்ஸ் அதிகாரிகள்

நாடு முழுவதும் உள்ள வணிக ரீதியான குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களின் செயல்பாட்டைச் சீர்குலைத்த இணையவழித் தாக்குதல்களை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் அரங்கேற்றியதாக பிரான்ஸ் அதிகாரிகள் திங்களன்று (09) குற்றம் சாட்டினர்.

மேலும், இதன் விளைவுகளை தெஹ்ரான் சந்திக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.

பிரெஞ்சு உளவுத்துறை மற்றும் இணையப் பாதுகாப்பு அமைப்புகளின் கூட்டு அறிக்கை ஒன்று, புரட்சிகரப் பாதுகாப்புப் படையுடன் தொடர்புடைய இணையத் தாக்குதல் பிரிவு என விவரிக்கப்படும் ஷாஹித் காவேதான் இந்த ஹேக்கிங் நடவடிக்கையின் பின்னணியில் இருப்பதாக அடையாளம் கண்டுள்ளது.

மேலும், ஹமீத் ரெஸா லஷ்காரியன், மஹ்தி லஷ்காரியன் மற்றும் ரெஸா சலார்வந்த் ஆகிய மூன்று பங்காளிகளின் பெயர்களையும் அந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து விவாதிக்க ஈரானிய தூதர் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் தெரிவித்தார்.

இந்தத் தாக்குதல்கள் தொடர்பாக ஈரான் மீது ஐரோப்பிய ஒன்றியம் மேலும் தடைகளை விதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார்.

ஒக்டோபர் மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான பிரெஞ்சு பல்பொருள் அங்காடிகளை குறிவைத்த இந்தத் தாக்குதல்கள், குளிர்பதன சேமிப்பு அமைப்புகளைச் சீர்குலைத்தன. பிரான்ஸ் முழுவதும் சுமார் 700 வணிக நிறுவனங்கள் குறிவைக்கப்பட்டதாகவும், ஹேக்கர்கள் குளிரூட்டும் அலகுகளின் வெப்பநிலையை அதிகரித்ததால் குறைந்தது 15 இடங்களில் தீ விபத்துகள் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை தெரிவித்தது.

பாதிக்கப்பட்ட பெரும்பாலான இடங்கள் பல்பொருள் அங்காடிகளாக இருந்தபோதிலும், சிறிய இறைச்சிக் கடைகள், ஒரு இறைச்சிக் கூடம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் பாதிக்கப்பட்டன.