“அரசியல் நிலைப்பாட்டை மென்மைப்படுத்தி மக்களைக் கவரும் முயற்சியில் ஈடுபடப் போவதில்லை” – Mélenchon
Jean-Luc Mélenchon தனது அரசியல் நிலைப்பாட்டை மென்மைப்படுத்தி மக்களைக் கவரும் முயற்சியில் ஈடுபடப்போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். Le Bourget நகரில் நவம்பர் மாதம் 7ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தனது தீவிர அரசியல் கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார். “மக்களைக் கவர்வதற்காகவும், சர்ச்சைக்குரிய அரசியல் தலைவராகத் தோன்றுவதைத் தவிர்ப்பதற்காகவும் எனது கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளுமாறு சிலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால், நான் அதனைச் செய்யப்போவதில்லை” என அவர் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் 20,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். மேலும், “என்னால் உங்களுக்கு முன்வைக்கக்கூடிய ஒரே நியாயமான தீர்வு, அனைத்தையும் மாற்றியமைப்பதே” என்றும் அவர் வலியுறுத்தினார்.
தனது கட்சியின் அடிப்படை மாற்றத்துக்கான அரசியல் திட்டத்தில் தொடர்ந்து உறுதியாக இருப்பதுடன், சுற்றுச்சூழல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட இதுவரை அதிகம் பேசப்படாத விடயங்களையும் விரிவாக உள்ளடக்கவுள்ளதாக La France Insoumise கட்சியின் ஒருங்கிணைப்பாளர் Manuel Bompard தெரிவித்தார். கூட்டத்தின் ஆரம்பத்தில், Yvelines மாவட்டத்திலுள்ள Trappes மற்றும் La Verrière பகுதிகளில் இடம்பெற்ற இனவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட Pengo Bossio Wangi என்பவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையிலான கடந்த பத்து ஆண்டுகால அரசு நிர்வாகத்தை Mélenchon கடுமையாக விமர்சித்தார். இளைஞர்கள் மற்றும் தொழிலாளர் தரப்பினரிடையே அதிகரித்து வரும் அதிருப்தியைச் சுட்டிக்காட்டிய அவர், மக்ரோனின் ஆட்சிக்காலத்தின் இறுதிக்கட்டத்தை “இருண்ட ஆட்சியின் முடிவு” என வர்ணித்தார்.
மேலும், நாட்டில் இடம்பெறும் போராட்டங்களின்போது மக்களின் கோரிக்கைகளுக்குப் பதிலாக காவல்துறையினரின் வன்முறைகளே பதிலாகக் கிடைப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். அதேவேளை, வலதுசாரிக் கட்சியான Rassemblement National மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், “இனவாதத்தைத் தவிர அவர்களிடம் வேறு எந்தக் கொள்கையும் இல்லை” எனத் தெரிவித்தார். இதற்கிடையில், Insoumis கட்சியின் புதிய ஜனாதிபதித் தேர்தல் அரசியல் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை புத்தகமாக வெளியிடப்பட்டது. ‘L’Avenir en commun’ என்ற திட்டத்தின் புதிய பதிப்பில் 1,069 முன்மொழிவுகள் இடம்பெற்றுள்ளன.
