Main Menu

சுவிட்சர்லாந்தில் இன்று விறுவிறுப்பான பொதுவாக்கெடுப்பு: சனத்தொகையை ஒரு கோடியாகக் கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு மக்கள் ஆதரவா?

சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த சனத்தொகையை சட்டப்பூர்வமாக ஒரு கோடியாகக் கட்டுப்படுத்துவது தொடர்பான மிக முக்கிய மற்றும் உலக நாடுகளால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுவாக்கெடுப்பு இன்று (14)  ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இந்த வாக்கெடுப்பானது அந்நாட்டில் குடியேற்றம், பொதுச் சேவைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான சுவிஸின் உறவு குறித்த விவாதங்களை உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

வலதுசாரி கட்சியான ‘சுவிஸ் மக்கள் கட்சி’ முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம், நாட்டின் வீட்டுவசதி, உட்கட்டமைப்பு, கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் பொதுச் சேவைகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரு “நிலைத்தன்மைக்கான முன்முயற்சி” என அதன் ஆதரவாளர்களால் வர்ணிக்கப்படுகிறது.

எனினும், சுவிஸ் அரசாங்கம், ஏனைய அரசியல் கட்சிகள், வர்த்தகக் குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதுடன், இதனை ஒரு “குழப்ப முன்முயற்சி” எனவும் சாடியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தின் சுகாதாரம் மற்றும் சுற்றுலாத்துறைகள் பெருமளவு வெளிநாட்டுத் தொழிலாளர்களையே நம்பியுள்ளன. இச்சட்டம் நிறைவேறினால் கடும் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என வர்த்தக அமைப்பு எச்சரித்துள்ளது.

இந்த சனத்தொகைக் கட்டுப்பாடு காரணமாக, சுவிஸின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியத்துடன் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கான சர்வதேச ஒப்பந்தங்களை சுவிட்சர்லாந்து மறுபரிசீலனை செய்ய நேரிடும். இது நாட்டைப் பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனிமைப்படுத்தும் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சுவிட்சர்லாந்தின் சனத்தொகை கடந்த 2002இல் 73 இலட்சமாக இருந்த நிலையில், தற்போது அது 91 இலட்சமாக  அதிகரித்துள்ளது. இதில் 27 சதவீதத்தினர் வெளிநாடுகளில் பிறந்தவர்களாவர்.

இந்த வாக்கெடுப்பில் சட்டம் அங்கீகரிக்கப்பட்டால் நாட்டின் மக்கள் தொகை 95 இலட்சத்தை எட்டியதும் அரசாங்கம் அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

2050ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் தொகை 1 கோடியைக் கடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்காக, புகலிடக் கோரிக்கைகளை நிராகரித்தல் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களின் குடும்ப மறுஇணைப்பு உரிமைகளை இரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படலாம்.

சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறையின்படி, ஒரு விவகாரத்திற்கு எதிராக 100,000 குடிமக்களின் கையெழுத்துக்களைத் திரட்டினால், அதற்கு நாடளாவிய ரீதியில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படலாம். போக்குவரத்து நெரிசல், வாடகை உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீட்டுக் கட்டண உயர்வு ஆகியவற்றால் அதிருப்தியடைந்துள்ள சுவிஸ் மக்கள் மத்தியில் இந்தத் திட்டம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

எனினும், அண்மைய கருத்துக்கணிப்புகளின்படி, இந்தத் திட்டத்திற்கு 52% மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர், 45% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கணிசமான எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இன்னும் தங்கள் முடிவை அறிவிக்காததால், இன்றைய வாக்கெடுப்பின் முடிவு மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் அமையலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.